[X] Close

கேரளாவில் சூடுபிடிக்கும் அரசியல் களம்: 16 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 


ruling-ldf-in-kerala-to-field-6-sitting-mps-mlas-in-ls-polls

  • போத்திராஜ்
  • Posted: 09 Mar, 2019 17:30 pm
  • அ+ அ-

 

திருவனந்தபுரம், பிடிஐ

மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படக்கூடிய சூழல் இருக்கும் நிலையில், அதற்குத் தயாராகும் வகையில் கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தனது வேட்பாளர்களை இன்று அறிவித்தது.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று 16 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தது. இதில் 6 பேர் தற்போது எம்.பி.யாக இருப்பவர்களுக்கும், எம்எல்ஏவாக இருக்கும் 6 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரு பெண்களுக்கும், இரு சுயேச்சைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2-வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே 4 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தாலும், அதிகாரபூர்வமாக அதை உறுதி செய்யவில்லை. தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கிடைத்தபின் அதை உறுதி செய்ய உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 2 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

அதேசமயம், இடதுசாரி முன்னணி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எந்தவிதமான இடங்களும் வழங்கப்படவில்லை.

இந்த அறிவிப்பின்படி, தற்போது எம்.பி.யாக இருக்கும் இன்னோசென்ட்(சாலக்குடி தொகுதி), ஜாய்ஸ் ஜார்ஜ்(இடுக்கி), எம்.பி. ராஜேஷ் (பாலக்காடு), பி.கே. பிஜு(ஆலத்தூர்), ஏ.சம்பத்(அட்டிங்கல்) பி.கே.சிறீமதி டீச்சர்(கண்ணூர்).

இதுதவிர ஏ.எம். ஆரிஃப்(ஆலப்புழா),  வீணா சார்ஜ்(பத்தினம்திட்டா),  ஏ பிரதீப் குமார்(கோழிக்கோடு), பி.வி.அன்வர்(பொன்னானி) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் தற்போது எம்எல்ஏவாக இருக்கின்றனர்.

இதில் ஜாய்ஸ் ஜார்ஜ் மற்றும் பி.வி.அன்வர் ஆகிய இருவரும் சுயேட்சை வேட்பாளர்களாக இருந்தபோதிலும், மார்க்சிஸ்ட் ஆதரவுடன் போட்டியிடுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் தற்போது மாவேலிக்கரை எம்எல்ஏ.வாக இருக்கும் சி.திவாகரன், திருவனந்தபுரத்தில் சிதயம் கோபகுமார், வயநாடு பி.பி.சுனீர், திருச்சூர் ராஜாஜி மாத்யூ தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், " வரும் மக்களவைத் தேர்தல் என்பது மிக முக்கியமானது, மக்களவையில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரிக்க நல்லதொரு வாய்ப்பாகும். தற்போது எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வெற்றி பெறும் திறன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மக்களவைத் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2009 -ம் ஆண்டு 4 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல முறையும் நடந்துள்ளது " எனத் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 12 இடங்களிலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி 8 இடங்களிலும் வென்றன. பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

ஆனால் இந்த முறை சபரிமலை விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையாண்ட விதம், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செய்த போராட்டம், அதனால் ஏற்பட்ட களேபரம் ஆகியவையும், மழைவெள்ளத்தில் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசு போதுமான நிதியுதவி அளிக்காமலிருந்தது போன்றவை முக்கிய விஷயங்களாக எதிரொலிக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close