காதலர் தினத்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய இளைஞர்கள்

குஜராத்தில் இளைஞர்கள் சிலர் இணைந்து காதலர் தினத்தை முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளனர்.
ஏராளமான காதலர்களைச் சேர்த்து வைத்த வாலண்டைன் என்பவரின் நினைவால் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த இந்தக் கலாச்சாரம், உலக மயமாக்கலின் விளைவால் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
இதனிடையே குஜராத் இளைஞர்கள் சிலர் இணைந்து, அகமதாபாத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் இணைந்து காதலர் தினத்தைக் கொண்டாடினர்.
இதுகுறித்து இளைஞர்களின் ஒருவரான அன்சாரி பேசும்போது, ''நம்முடைய பெற்றோர்தான் நமது முதல் காதலாக இருக்கவேண்டும் என்பதை ஏராளமான மக்கள் மறந்துவிடுகின்றனர்.
எங்களுடைய உடைகள் வேண்டுமானால் மேற்கத்தியக் கலாச்சாரத்தைத் தழுவி இருக்கிலாம். ஆனால் எங்களின் எண்ணங்கள் இந்தியர்களையே பிரதிபலிக்கின்றன. அதனால்தான் காதலர் தினத்தைக் கொண்டாட இங்கு வந்தோம்.
இங்கு வசிப்பவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினோம். அவர்களும் எங்களுடன் இணைந்து நடனமாடித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நாளை நிறைவாக உணர்கிறோம்'' என்றார்.