[X] Close

மதுபாலாவின் 86-வது பிறந்த தினம்: அழகிய ஓவியத்தில் மிளிரும் கூகுள் டூடுள்


google-honours-madhubala-on-her-birthday-with-doodle

ஓர் அழகிய ஓவியப் பாவையாக பாலிவுட் நடிகை மதுபாலா

  • பால்நிலவன்
  • Posted: 14 Feb, 2019 11:56 am
  • அ+ அ-

பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தில் அவரை நினைவுகூரும் விதமாக ஓர் அழகிய ஓவியப் பாவையாக்கி இன்றைய கூகுள் டூடுள் கொண்டாடுகிறது.

மிகப்பெரிய இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் மர்லின் மன்றோ என்றழைக்கப்படும் மறைந்த பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓர் அற்பதமான ஓவியத்தை டூடுளாக கூகுள் வடிவமைத்துள்ளது. பெங்களூருவை பூர்வமாகக் கொண்ட முகமது சாஜித் என்ற ஓவியர் இன்றைய கூகுள் டூடுளில் தீட்டியுள்ளார்.

அவர் நடித்த படங்களிலேயே மிகவும் சிறந்த படங்களில் ஒன்றான முகல் ஏ ஆஸம் (1960) என்ற திரைப்படத்தில் அனார்கலியாக தோன்றிய நடித்த ஒரு நடனக் காட்சிதான் இன்றைய கூகுள் டூடுளில் நாம் காண்கிறோம்.

1933ல் டெல்லியில் பிறந்த மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் ஜெகன் பேகம் தெஹ்லவி. பின்னர் அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. திரைப்பட உலகின் கடைக்கண் பார்வை கிடைக்கும்விதமாக அவர் வளர்ந்தது எல்லாம் பாம்பே டாக்கீஸ் பிலிம் ஸ்டூடியோவுக்கு அருகில்தான்.

மதுபாலா ஒரு குழந்தை நட்சத்திரமாகத்தான் முதன்முதலில் வெள்ளித்திரையில் தோன்றினார். அப்போது அவரது வயது 9. பேபி மும்தாஜ் என்ற பெயரில் அவர் நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் ''பசந்த்''. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீல் கமலில் ராஜ்கபூருடன் தோன்றினார்.

மதுபாலா, 1949 ஆம் ஆண்டில் மட்டும் ஒன்பது திரைப்படங்களில் நடித்தார். மிகப்பெரிய வெற்றிப் படமான ''மஹால்'' திரைப்படம் வசூலை அள்ளித்தந்தது.

அடுத்த இருபதாண்டுகளில் மதுபாலா பாலிவுட்டின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார். 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பெக்கசூர், படால், ஹவுரா பாலம், கலா பாணி, சால்டி கா நாம் காடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது படங்களிலேயே மணிமகுடமாகத் திகழ்ந்தது முகல்-ஏ-ஆஸம் திரைப்படம்.

சரித்திரப் படமான முகம் ஏ ஆஜம் திரைப்படத்தில் மதுபாலா அனார்க்கலியாக நடித்திருந்தார். ஒரு நாட்டியம் ஆடும் குடும்பத்தைச் சேர்ந்த அனார்க்கலி பேரரசர் அக்பரின் மகன் சலீம் மீது காதல் கொள்கிறாள். ஒரு காவியக் காதலாகவே இறுதியில் சோகத்தைத் தழுவி நிற்கும் கதையம்சம் கொண்டது.

இத்திரைப்படத்தில் சலீம் பாத்திரம் ஏற்றிருந்தவர் அன்றைய இளம் நாயகன் திலீம் குமார். இக்காதல் திரைப்படப் பணிகள் நிறைவு பெறுவதற்குள்ளாக இருவரும் உள்ளம்ஒன்றிய காதலர்களானார்கள். ஆனால் திரைப்படம்போலவே அவர்கள் காதலும் ஈடேறவில்லை என்பதுதான் நிஜம்.

முகல் ஏ ஆஜம் திரைப்படம் வெளியான ஆண்டில்தான் மதுபாலாவின் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரைக் கரம்பிடித்தவர் கிஷோர் குமார் எனும் புகழ்பெற்ற பாடகர். அவர்கள் ஒரு நல்ல மனமொத்த தம்பதிகளாக மதுபாலாவின் இறுதிக்காலம்வரை அன்போடு வாழ்ந்தனர்.

 எனினும் மதுபாலா எனும் வெள்ளித்திரை வானின் நட்சத்திரம் வெகு குறுகிய காலமே ஒளிர்ந்து திடீரென ஒருநாள் உதிர்ந்தது. ஆம், இந்த உலகத்தில் அவர் வாழ்ந்தது 36 ஆண்டுகள் மட்டுமே.  நீடித்த நோய் ஒன்றில் அவதியுற்று வந்த இளம் தாரகை ஒருநாள் தனது கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

2008-ல் இந்திய அரசு வெள்ளித்திரை நாயகியின்  மகத்தான கலைச்சேவையைக் கொண்டாடும்விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close