[X] Close

கர்நாடகாவில் பாஜக வித்தியாச பிரச்சாரம்: 28 தொகுதிகளிலும் மோடி கால் சென்டர்


modi-call-center

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:36 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவதற்காக கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் அவரது பெயரில் 'கால் சென்டர்' தொடங்கி, பிரச்சாரம் செய்ய பாஜக முடிவெடுத்துள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமராக வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட பாஜக முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் மோடி ‘கால் சென்டர்' தொடங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக பொதுச்செயலாளர் ரவிகுமார் கூறியதாவது: நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூரு, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரச்சார மையமாக விளங்கப் போகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை வாக்காளர்களிடம் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்தக்கட்டமாக கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் மோடி கால் சென்டர் தொடங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, மோடி அரசின் சாதனைகளை விளக்கி கூறுவார்கள். வாக்காளர்களின் சந்தேகங்கள் களையப்பட்டு, அவர்க‌ளுக்கு தேவையான விவரங்கள் தெரிவிக்கப்படும். முதல்கட்டமாக பெங்களூருவில் உள்ள கிரிநகரில் கடந்த 8-ம் தேதி மோடி கால் சென்டர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மஞ்சுநாத் என்ற ஆட்டோ ஓட்டுநரும், 5 வயது சிறுமி சவும்யாவும் திறந்து வைத்தனர். ‘Tea Modi - 300' என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை வாக்காளர்கள் தொடர்பு கொள்ள 2 அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

28 தொகுதிகளில் இயங்கும் இந்த மையங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் சக்தி கேந்திராவை கண்காணிக்கும். இதில் ஒரு சக்தி கேந்திரா என்பது 5 வாக்குசாவடிகளின் தொகுப்பு ஆகும். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்ட மையமும் 2 ஆயிரம்வாக்குப்பதிவு மையங்களின் விவரங்களை கண்காணித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்.

இதுதவிர, தேசிய அளவிலான பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் 2 பிரச்சார மையங்களும், 2 மாநில அளவிலான பிரச்சார மையங்களும் பெங்களூருவில் அமைகின்றன. டீ விற்ற மோடி, 300 இடங்களில் வென்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இவ்வாறு பாஜக பொதுச் செயலாளர் ரவிகுமார் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close