[X] Close

பிளாஸ்திரி அல்ல அறுவைசிகிச்சைதான் தேவை: கேஜ்ரிவாலிடம் கம்பீர் வலியுறுத்தல்


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 13 Feb, 2019 18:14 pm
  • அ+ அ-

டெல்லி விபத்து தொடர்பாக மக்களுக்கு பிளாஸ்திரி அல்ல அறுவைசிகிச்சைதான் தேவை என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

ஓட்டலில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி ஓட்டலில் மேலும் 2 தளங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் ஓட்டலின் அவசர கால வழியை அடைத்து வைத்ததாலும் உயிரிழப்பு அதிகரித்தது. 

இதனிடையே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவுதம் கம்பீர், ''கண்டிப்பாக ஒரு மனித உயிர் 5 லட்ச ரூபாயைக் காட்டிலும் அதிக மதிப்பு கொண்டது. இது நம்முடைய அமைப்பைக் குறித்து சாமானியர் நினைப்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

இழப்பீடு என்பது காயத்தின் மீது போடப்படும் பிளாஸ்திரி போன்றது. ஆனால் டெல்லிக்குத் தேவைப்படுவது அறுவைசிகிச்சை. அது மாநிலத்தின் அமைப்பைச் சரிசெய்வதில் தொடங்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close