[X] Close

மக்களவை தேர்தல் குறித்து உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி முக்கிய ஆலோசனை


congress-election

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக அண்மையில் பிரியங்கா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் உ.பி. தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பிரம்மாண்ட வாகன பேரணியில் உற்சாகமாக கலந்துகொண்ட பிரியங்கா காந்தியுடன் அவரது சகோதரரும் கட்சியின் தலைவருமான ராகுலும் இணைந்து கொண்டார்.

பிரியங்காவின் வருகையையொட்டி நகர் முழுவதும் வரவேற்பு பேனர்கள் வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து உ.பி-யில் 4 நாட்கள் பிரியங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜெய்ப்பூர் சென்றிருந்த பிரியங்கா பிற்பகலில் லக்னோ திரும்பினார். பின்னர் உ.பி. மாநில காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் குறித்து அவர் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் உ.பி. மாநில பொறுப்பாளர் ஜோதிராதித்ய சிந்தியா, லக்னோ, உன்னாவ், மோகன்லால்கஞ்ச், ரே பரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ், அம்பேத்கர் நகர், சீதாப்பூர், கவுஷாம்பி, பதேபூர், பஹ்ரைச், புல்பூர், அயோத்யா மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு, கள நிலவரம் குறித்து அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் மாலை வரை நீடித்தது. கட்சியின் 70 நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு நிர்வாகிகளிடம் எதிர்க்கட்சிகளின் நிலைமை, களத்தில் அந்தக் கட்சிகளின் பலம் குறித்தும் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மேலும் பிரியங்காவைச் சந்தித்த நிர்வாகிகளிடம் ஒரு பக்க விண்ணப்பம் தரப்பட்டு, அவர்கள் எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் பெறப்பட்டன. 

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close