[X] Close

அலசல்: ஒதுக்கீடு குறைந்தால் பலன் கிடைக்குமா?


will-the-quota-get-benefit

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 11:19 am
  • அ+ அ-

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நலத் திட்டங்களின் பலன் உரியவர்களைச் சென்றடைய வேண்டும். சில அறிவிப்புகள், திட்டங்களின் பலன் கண்ணுக்குத் தெரியும். ஆனால் சில திட்டங்களின் பலனை நீண்ட கால அடிப்படையில்தான் உணர முடியும். அப்படியான ஒரு திட்டம்தான் தேசிய சுகாதார திட்டமாகும் (என்ஹெச்எம்). மக்கள் நலமாக இருந்தால் மட்டுமே தேசம் வளமாக இருக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டே   இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருவதுதான் அவலம். 2014-15-ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 சதவீதம். ஆனால் சமீபத்தில் வெளியான இடைக்கால பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைந்துவிட்டது.

2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 31,274 கோடியாகும். இதில் தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு கிடைத்த தொகை ரூ. 18,609 கோடியாகும்.

தற்போது போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கான ஒதுக்கீடு ரூ. 63,298 கோடி. இத்துறைக்கான ஒதுக்கீடு அதிகரித்தபோதிலும் இதில் தேசிய சுகாதாரத் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 31,745 கோடி.

கடந்த நிதி ஆண்டில் இத்துறைக்கான ஒதுக்கீடு 55 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 5 சதவீதம் குறைந்து 50 சதவீதமாகிவிட்டது. அதே சமயம் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்துக்கான ஒதுக்கீடு மொத்த ஒதுக்கீட்டில் 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்துக்கு கிடைக்கும் தொகை ரூ. 6,400 கோடியாகும். மருத்துவ ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கீடு பெறும்  ஒரே திட்டமாக இது திகழ்கிறது.

தொற்று நோய் அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒதுக்கீடும் கடந்த சில பட்ஜெட்களில் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. அதே நிலை இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் நீடித்துள்ளது. 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.1,004 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒதுக்கப்பட்டதோ ரூ. 717 கோடி மட்டுமே. அதாவது 28 சதவீதம் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை நலன், மகப்பேறு மருத்துவத்துக்கான ஒதுக்கீடு குறைந்து வருவது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். கடந்த ஆண்டு இதற்கான ஒதுக்கீடு ரூ. 7,545 கோடி. ஆனால் இப்போது ரூ. 5,253 கோடியாகும். அதேபோல மருத்துவ கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 43 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ. 1,750 கோடி மட்டுமே. இத்தொகை மூலம்தான் மருத்துவக் கல்லூரிகள் கட்டுவது மற்றும் மாவட்ட மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்துக்கான ஒதுக்கீடு வெறும் 0.31 சதவீதம் மட்டுமே. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டதைவிட இது மிகவும் குறைவாகும். பொது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு ஜிடிபி-யில் 2.5 சதவீதம் இருக்க வேண்டும் என தேசிய சுகாதார அறிக்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. 2017-ல் வெளியான இந்த அறிக்கை 2025-ல் இந்த இலக்கை எட்ட வேண்டும் என கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் ஆண்டுக்காண்டு மருத்துவத்துக்கான ஒதுக்கீடு குறைந்துவரும் நிலையில் இந்த இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் என்பது தெரிகிறது.

மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதுதான் பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டமாகும். அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்தாமல் நோய் வந்த பிறகு அவர்களுக்கு காப்பீடு மூலம் மருத்துவ சிகிச்சை அளிப்பது சரியான திட்டமாகுமா?

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close