[X] Close

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: பூபன் ஹசாரிகா மகன் பாரத ரத்னா விருதை ஏற்பாரா?


bhupen-hazarikas-bharat-ratna-tied-to-citizenship-bill

மறைந்த இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகா

  • போத்திராஜ்
  • Posted: 12 Feb, 2019 09:53 am
  • அ+ அ-

நமது சிறப்பு நிருபர்

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை எவ்வாறு மத்திய அரசை கையாள்கிறது என்பதைப் பொருத்துதான் தனது தந்தைக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்பேன் என்று இசைக்கலைஞர் பூபன் ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பாரத ரத்னா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பூபன் ஹசாரிகா 2011ம் ஆண்டு தனது 93 வயதில் காலமாகிவிட்டநிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு அசாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், இசைஅமைப்பாளர் பூபன் ஹசாரிகாவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பது குறித்து அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொருத்துதான் விருதை தாம் ஏற்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பூபன் ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இ ருப்பதாவது:

மக்களுக்கு வலியைத் தரக்கூடிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றவே, என் தந்தையின் பெயரையும், வார்த்தைகளையும் செயல்படுத்தி, புகழ்பாடுகிறார்கள் என நம்புகிறேன். இது அவரின் நிலைப்பாட்டைத் தவறாக சித்தரிப்பதாகும்.

என் தந்தைக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பேனா அல்லது மறுப்பேனா என்று கேள்வி கேட்கிறார்கள். எனக்கு இதுவரை எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை, ஆதலால், புறக்கணிக்க ஏதும் இல்லை. அதேசமயம், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எவ்வாறு மத்திய அரசு அணுகும் என்பதைப் பொருத்தே பாரத ரத்னா விருதை நான் ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வேன் " எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன், மணிப்பூரைச் சேர்ந்த இசையமைப்பாளரும், திரைப்படஇயக்குநரான அபிராம் ஷியாம் சர்மா தனக்கு கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்மசிறீ விருதைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close