[X] Close

டெல்லி ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து: 9 பேர் பலி, பலர் படுகாயம்


karol-bagh-hotel-fire-9-dead-after-fire-breaks-out-in-delhis-hotel-arpit-palace-all-35-people-rescued

  • போத்திராஜ்
  • Posted: 12 Feb, 2019 08:43 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, ஏஎன்ஐ

டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 9 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. 4 அடுக்குகளையும், 40-க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த ஹோட்டலில் 60-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்தத் தீவிபத்தில் 9 பேர் உடல் கருகி பலியானார்கள், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டெல்லி தீயணைப்பு படை துணைத் தலைவர் சுனில் சவுத்ரி கூறுகையில், " தீவிபத்து குறித்து எங்களுக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தகவல் அளித்தார்கள். உடனடியாக இங்கு வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டுள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்து முதலில் 4-வது மாடியில் ஏற்பட்டுள்ளது, அதன்பின் தீ மெல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டபோது, 60 பேர் வரை இருந்துள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இப்போதுவரை 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வாகனங்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய தீயை அணைத்துவிட்டோம். தீவிபத்துக்கான காரணம் குறித்து இனி ஆய்வு செய்யப்படும். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதுகிறோம் " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close