[X] Close

31 ஆண்டுகளாகப் பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தலைமையாசிரியர்


31

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 11 Feb, 2019 17:25 pm
  • அ+ அ-

கர்நாடகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கடந்த 31 ஆண்டுகளாக பள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து வருகிறார்.

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ் நகரின் ஹோங்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரசுத் தொடக்கப் பள்ளி அது. அங்கு தலைமை ஆசிரியராகப் பணிபுரிகிறார் மகாதேஸ்வர சாமி. நிர்வாகப் பொறுப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சுதாதார விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார்.

பள்ளியின் நூலகத்தை விரிவுபடுத்தவும், தோட்டத்தை அமைக்கவும் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்திருக்கிறார் சாமி. இதுகுறித்துப் பெருமையுடன் பகிர்ந்துகொள்ளும் கிராம மக்கள், ''தினந்தோறும் பள்ளிக்கு வந்ததும் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துவது, வகுப்பறைகளைப் பெருக்குவது, தோட்டத்தைப் பராமரிப்பது எனப் பள்ளியின் சுத்தத்தையும் தனிமனித சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார்.

அத்துடன் கற்பித்தல், விளையாட்டுகள் என குழந்தைகளுக்கு அறிவை ஊட்டுகிறார். இதனால் எங்களின் குழந்தைகளைத் தினந்தோறும் பள்ளிக்கு அனுப்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கின்றனர்.

முதன்முதலாக பழங்குடியின ஆர்வலரான சுதர்சன் என்பவரால் 1988-ல் தொடங்கப்பட்ட பழங்குடிப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த மகாதேஸ்வர சாமி, இன்றுவரை சுமார் 31 வருடங்களாக கழிப்பறைகளைச் சுத்தம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பழங்குடியினர் பள்ளியில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அங்கு வேலை பார்த்தது தனி மனித சுகாதாரத்தையும் சமூக சேவையின் முக்கியத்துவத்தையும் போதித்தது. 1994-ல் அரசு வேலை கிடைத்தது. ஆனாலும் என் வழக்கத்தை மாற்றவில்லை.

நாம் பயன்படுத்தும் இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பது நம்முடைய பொறுப்பு. அதனால் எங்கு சென்றாலும் அதே பழக்கத்தைத் தொடர்கிறேன்'' என்கிறார் மகாதேஸ்வர சாமி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close