[X] Close

ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை; தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள்: பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரி்க்கை


pm-didnt-follow-raj-dharma-says-chandrababu-naidu-on-fast-in-delhi

  • போத்திராஜ்
  • Posted: 11 Feb, 2019 11:21 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

2002-ல் நடந்த குஜராத் கலவரத்திலும் ராஜ தர்மத்தை மோடி பின்பற்றவில்லை, ஆந்திராவுக்கு சிறப்புஅந்தஸ்து வழங்குவதிலும் ராஜ தர்மத்தை பின்பற்றவில்லை. தனிநபர் தாக்குதலில் ஈடுபடாதீர்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் "தர்ம போரட்ட தீக் ஷா" என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியாளர்கள் ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறுவார். ஆனால், குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து அவர் கூறும்போது, அங்கு ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை என்றார்.

இப்போது குஜராத்தைப் போல, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை. எங்களுடைய உண்மையான உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்து, தேசஒற்றுமையை சீர்குலைக்கிறது.

5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன். ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி உறுதியளித்தவாறு சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என நினைவுபடுத்துகிறேன்.

அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். தனிப்பட்ட முறையில் என் மீதும், என் மக்கள் மீதும் எந்தவிதமான பேச்சும் வேண்டாம். நான் என் மாநிலத்துக்காகப் பணியாற்றிவருகிறேன்.

நீங்கள் அளித்த வாக்குறுதியின்படி நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். ஆனால், சுயமரியாதைக்கு இழுக்கு வரும்வகையில் பேசினால், நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம். நாடாளுமன்ற பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close