[X] Close

இந்தியாவை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே இம்ரான்: பாக். பிரதமருக்கு மத்திய அரசு பதிலடி


india-slams-pakistan-pm-imran-khan-for-remarks-on-treatment-of-minorities-calls-it-insult-to-indians

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 11:13 am
  • அ+ அ-

 

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

சிறுபான்மையினர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவை இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, உங்கள் உள்நாட்டு சிக்கல்களை முதலில் தீர்க்கப்பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், " என்னுடைய அரசு போதும் சிறுபான்மையின மக்களை 2-ம் தர குடிமக்களைப் போல் நடத்தாது. இந்தியாவில்தான் முஸ்லிம்களையும், சிறுபான்மையினர்களையும் 2-ம் தர மக்கள்போல் நடத்துகிறார்கள் " எனத் தெரிவித்திருந்தார்.

இம்ரான் கானின் இந்த கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தையும், தகுந்த பதிலடியையும் அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

" பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறுபான்மையினர் குறித்த கருத்து இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தருகிற நோகடிக்கும் கருத்து. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய பண்புகளை இன்னும் இம்ரான் கான் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. முற்போக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு உண்டு, சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.

இந்தியாவில் உயர்ந்த பதவியில் அலங்கரித்தவர்கள், அதிகாரப்பதவியில் இருந்தவர்கள் அனைவரும், அனைத்து மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள் என்பதை பாகிஸ்தான் பிரதமர் அறிந்திருப்பார்.

ஆனால், பாகிஸ்தானிலோ, முஸ்லிம் மத நம்பிக்கை இல்லாதவர்கள், அரசமைப்புச் சட்டத்தின் உயர்ந்த பதவி வகிக்க தடைவிதிக்கப்படுகிறது. சிறுபான்மையினர், நயா பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்தாலும் வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகிறார்கள்.

மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்குப் பதிலாக, உங்கள் நாட்டின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, உள்நாட்டளவில் இருக்கும் சவால்களை தீர்க்கக் கவனம் செலுத்துவது பாகிஸ்தான் பிரதமருக்குச் சிறந்தது "

இவ்வாறு ராவேஷ் குமார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close