[X] Close

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக்கொலை: பாஜகவினர் சதிச்செயல் என குற்றச்சாட்டு


trinamool-leader-shot-dead-at-point-blank-range-during-function-in-bengal

  • போத்திராஜ்
  • Posted: 10 Feb, 2019 10:49 am
  • அ+ அ-

கொல்கத்தா, ஐஏஎன்எஸ்

மேற்கு வங்க மாநிலம், நாதியா மாவட்டத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துக்கு பாஜகவினர்தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தலித் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த தலைவராகவும் இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். கிருஷ்ணகாஞ்ச் தனித் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக சத்யஜித் பிஸ்வாஸ் இருந்தார்.

இந்நிலையில், நாடியா மாவட்டம், புல்பாரி பகுதியில் நேற்று மாலை சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ், அமைச்சர் ரத்னா கோஷ், மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கவுரிசங்கர் தத்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர்.

அப்போது, நிகழ்ச்சி தொடங்கிய சிறிதுநேரத்தில் திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன், நாற்காலியில் அமர்ந்திருந்த சத்யஜித் பிஸ்வாஸ் சுருண்டு கீழே விழுந்தார். உடனே கூட்டத்தினர் பதற்றத்தில் ஓடியபோதுதான் யாரோ மர்ம நபர்கள் பிஸ்வாஸை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது தெரிந்தது. பிஸ்வாஸ் குண்டுக்காயம் பட்டு நினைவற்று இருந்தார்.

உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிஸ்வாஸ் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.

எம்எல்ஏ பிஸ்வாஸை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது யார் என இதுவரை தெரியவில்லை. ஆனால், இந்தக் கொலைக்கு பாஜகவினரே காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தக் கொலை குறித்து நாடியா மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து நாடியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கவுரிசங்கர் தத்தா கூறுகையில் " திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முகுல் ராய், பிஸ்வாஸ் மீது ஆத்திரத்தில் இருந்தார். பிஸ்வாஸ் எம்எல்ஏவாக இருப்பது முகுல்ராய்க்கு பிடிக்கவில்லை. இதனால், பிஸ்வாஸை முகுல் ராய் சதிசெய்து கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். போலீஸார் விசாரணையில் உண்மை தெரியவரும் " எனத் தெரிவித்தார்.

மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் " திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, பிஸ்வாஸ் கொல்லப்பட்டது துரதிருஷ்டமானது. ஆனால், ஒவ்வொரு கொலையையும் மற்ற கட்சியுடன் ஒப்பிடுவதை மம்தா கட்சி வழக்கமாக வைத்துள்ளது. கடந்த மாதம் ஜாய்நகர் எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது எங்களைக் குற்றம்சாட்டினார்கள். பிர்பும் மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அதை நாங்கள் அரசியலாக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே குற்றம்சாட்டினார்கள். போலீஸார் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் அதுதான் எங்களுக்குத் தேவை " எனத் தெரிவித்தார்

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close