[X] Close

அரபு நாடுகளின் கடன் சுமை அதிகரிப்பு: ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை


imf

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:45 am
  • அ+ அ-

2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு அரபு நாடுகளில் சிலவற்றின் பட்ஜெட் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அந்த நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டு எச்சரித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பல வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகள் சில நிதி பற்றாக்குறையில் உள்ளதாக துபாயில் நடைபெற்ற மாநாட்டில் பேசுகையில் லெகார்டு குறிப்பிட்டார்.

சில அரபு நாடுகளின் செலவினம் 64 சதவீதத்திலிருந்து 85 சதவீத அளவுக்கு அந்நாடுகளின் ஜிடிபி-யில் அதிகரித்துள்ளது. இந்த போக்கு 2008-ம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக காணப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார். நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ள அரபு நாடுகளில் பாதிக்கும்மேலானவற்றின் செலவினம் 90 சதவீதத்துக்கும் மேலாக உள்ளதாக அவர் கூறினார். 6 நாடுகள் அங்கம் வகிக்கும் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலின் கடன் சுமை அந்நாடுகளின் ஜிடிபி-யில் 13 சதவீதத்திலிருந்து 33 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். கச்சா எண்ணெய் கடந்த 5 ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததும் இதற்கு முக்கியக் காரணம் என்றார். 2014-ம் ஆண்டு ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தாக்கத்திலிருந்து இன்னும் சில நாடுகள் மீளவில்லை என்றார்.

இப்பிராந்தியத்தில் கணிசமான வளர்ச்சி காணப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஸ்திரமற்ற சூழலே காணப்படுகிறது என்றார். அடுத்து வரும் ஆண்டுகளில் எண்ணெய் ஏற்றுமதிசெய்யும் நாடுகள் மரபு சாரா எரிசக்தியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார். பாரீஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் அதாவது உலகின் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்துவதில் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக மரபு சாரா எரிசக்தி நுட்பங்கள் இருக்க வேண்டும் என்றார்.

சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து கடந்த மாதம்கணித்த ஐஎம்எப் நிறுவனம் வளர்ச்சிகுறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டது. மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவில் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளது.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ள மதிப்பு கூட்டு வரி (வாட்), உற்பத்தி வரி விதிப்பு ஆகியன வரவேற்கத்தக்க அம்சங்கள் என்று லெகார்டு பாராட்டினார். அதேசமயம் இதுபோன்று பல சீர்திருத்தங்கள் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close