அனில் அம்பானி குழும பங்குகள் 5 நாளில் ரூ.13 ஆயிரம் கோடி சரிவு

அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த 5 நாட்களாக கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் இந்நிறுவன பங்கு மதிப்பு ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு சரிந்தது. இதனால் 72 லட்சம் பங்குதாரர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பங்குச் சரிவுக்கு எல் அண்ட்டி ஃபைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் குழும நிறுவனங்கள்தான் காரணம் என்று அனில் அம்பானி குற்றம் சாட்டியுள்ளார்.
சில வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் குறிப்பாக எல் அண்ட் டிஃபைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் குழும நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த ரிலையன்ஸ் குழுமபங்குகளை பொது பங்குச் சந்தையில் விற்றதே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். இந்நிறுவனங்கள் பிப்ரவரி 4 முதல் 7-ம் தேதி வரை ரூ. 400 கோடிமதிப்புள்ள பங்குகளை விற்பனைசெய்துள்ளன. ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் நேவல், ரிலையன்ஸ் ஹோம்பைனான்ஸ், ரிலையன்ஸ் நிப்பான்லைஃப் ஏஎம்சி உள்ளிட்ட அனைத்துகுழும நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
அனில் அம்பானி கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ள எல் அண்ட்டி பைனான்ஸ் மற்றும் எடெல்வைஸ் குழும நிறுவனங்கள் தங்கள் வசம் அடமானமாக வைக்கப்பட்ட பங்குகளை சட்ட விதிகளுக்குஉட்பட்டே விற்பனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளன.