[X] Close

குமாரசாமிக்கு எதிரான வீடியோ ஆதாரம் வெளியிடுவதாக பாஜக எம்எல்ஏ தகவல்


kumarasamy-video

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 10:41 am
  • அ+ அ-

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக ஆடியோ பதிவுகளை வெளியிட்ட முதல்வர் குமாரசாமி ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வீடியோ பதிவை விரைவில் வெளியிடப் போவதாக பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவள்ளி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா மஜத எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசியதாகக் கூறி அது தொடர்பான 2 ஆடியோ பதிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதேபோல பாஜக மாநில தலைவர்கள், தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ.50 கோடி கொடுப்பதாக கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரிடம் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என குமாரசாமி தெரிவித்தார். இந்த ஆடியோ போலியானவை என எடியூரப்பா மறுத்துள்ளார்.

இந்நிலையில் மகாதேவபுரா பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவள்ளி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி எம்எல்ஏக்களிடையே ஒற்றுமை இல்லை. குமாரசாமி தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரை 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் புறக்கணித்துள்ளதால், இந்த ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை. இதை மறைக்கவே எடியூரப்பாவுக்கு எதிராக குமாரசாமி ஆடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளரான குமாரசாமி, தனக்கு தெரிந்த வித்தை மூலம் இந்த பொய்யான ஆடியோ பதிவுகளை உருவாக்கியுள்ளார். இது முற்றிலும் மிமிக்ரி செய்யப்பட்டது என்பது விரைவில் தெரியவரும்.

தன்னை நியாயவாதி போல பேசும் குமாரசாமி, எம்எல்சி சீட் கேட்ட ஒருவரிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். முதல்வர் அலுவலகத்தில் நடந்த‌ இந்த உரையாடல் தொடர்பான வீடியோ பதிவு எனக்கு கிடைத்துள்ளது. பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு, விரைவில் அந்த வீடியோவை வெளியிடுவேன். நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது குமாரசாமிக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close