[X] Close

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் ‘கை’ கோயிலுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்


lok-sabha-elections-are-approaching

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள இமூர் பகவதி அம்மன் கோயில்.

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 10:59 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற, 2 கைகளை சிலையாகக் கொண்டுள்ள கோயிலுக்கு அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர்.

பாலக்காடு அருகே இமூர் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இதில் 2 கைகள்தான் சிலையாக உள்ளது. இவை பார்வதியின் கைகள் என நம்பப்படுகிறது. இதில் ஒரு கை பார்வதியின் அச்சமின்மையையும் மற்றொரு கை எந்தப் பிரச்சினையிலிருந்தும் மீள முடியும் என்ற திறனையும் வெளிப்படுத்துகிறது என கோயில் மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவசரநிலை (1975-77) முடிவுக்கு வந்த பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அத்துடன் பசுவும் கன்றுக்குட்டியும் அடங்கிய சின்னமும் பறிபோனது. அப்போது இந்தக் கோயிலைப் பற்றி கேள்விப்பட்ட இந்திரா காந்தி, அங்கிருந்த சிலையின் 2 கைகளில் ஒரு கையை தனது கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்தார். அந்த சின்னம்தான் இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். இதையடுத்து, இமூர் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்ற இந்திரா, பெரிய மணி ஒன்றை காணிக்கையாக வழங்கினார். இந்தத் தகவலை கோயில் மேலாளர் பி.மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தேர்தல் நெருங்கும்போதெல்லாம் அரசியல்வாதிகள் இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதற்கு பலன் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டியும், வெற்றி பெற வேண்டியும் இந்தக் கோயிலுக்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் அதிக அளவில் செல்வதாகக் கூறப்படுகிறது. கேரளா மட்டுமல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில அரசியல்வாதிகளும் பகவதி அம்மனின் ஆசி வேண்டி அங்கு சென்று வருகின்றனர். இந்தக் கோயிலை மலபார் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவுக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது, இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உள்ளூர் காங்கிரஸார் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close