[X] Close

ஹம்பி தூண்களை அடித்து உடைத்த இளைஞர்கள்: வீடியோ வைரலான பின்னர் கைது


  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 08 Feb, 2019 18:14 pm
  • அ+ அ-

பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பியில் உள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை உடைத்து சேதப்படுத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை சில இளைஞர்கள் எட்டி உதைப்பது, அடித்து உடைப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம், ஹம்பி காவல்துறையிடம் பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தது. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.

இதுகுறித்து பல்லாரி எஸ்.பி. அருண் ரங்கராஜன் கூறும்போது, ''விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜ்பாபு, ராஜா, ராஜேஷ் சவுத்ரி மற்றும் ஆயுஷ் சாஹு ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. இதில் ராஜ்பாபுவும், ராஜேஷ் சவுத்ரியும் தினக்கூலிகள். இவர்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் ஆயுஷ் சாஹூ பெங்களூருவைச் சேர்ந்தவர். ராஜா பொறியியல் மாணவர்.

இவர்களுடன் ஐந்தாவதாக ஒரு நபரும் சேர்ந்து ஹம்பிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கிருந்து விஷ்ணு கோயிலுக்கு வந்தவர்கள் அங்கிருந்த தூண்களில் ஏறியுள்ளனர். உற்சாக மிகுதியில் அவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். ஐந்தாவது நபர் இது எதிலும் ஈடுபடாமல் மற்ற இடங்களில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்படவில்லை.

ஆயுஷ் சாஹூ வீடியோ எடுக்க மற்ற மூவரும் நினைவுச் சின்னங்களை அழித்துள்ளனர். அவற்றின் மதிப்பை அறியாமல், விளையாட்டாகத் தூண்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close