[X] Close

கின்னஸில் இடம்பெற்ற 88 வயது யானை தாட்சாயினி மரணம்


88

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 08 Feb, 2019 18:13 pm
  • அ+ அ-

யானைகளுக்குப் புகழ்பெற்ற கேரளாவில், கின்னஸில் இடம்பெற்ற 88 வயது யானை தாட்சாயினி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மாநிலம் முழுவதும் யானைக் காப்பகங்களை அமைத்து, பல்வேறு தரப்பட்ட யானைகளைப் பராமரித்து வருகிறது. 1950-ம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தினர் ஒரு பெண் யானை குட்டியை வாங்கினர். அதற்கு தாட்சாயினி என்று பெயர் சூட்டி ஆற்றங்கல் திருவாராட்டு கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தனர்.

 

அங்கிருந்த யானை, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்குச் சொந்தமான செங்கல்லூர் மகாதேவர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. அங்கேயே இத்தனை காலமாக  தாட்சாயினி யானை வசித்து வந்தது.

 

உலகப் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் சாமி ஊர்வலம் உள்பட பல்வேறு கோயில் ஊர்வலங்களில் பங்கேற்ற பெருமை தாட்சாயினிக்கு உண்டு. கடந்த 2016-ல் அதற்கு ’கஜராஜா’ பட்டம் வழங்கப்பட்டது. 83 வயதான தாய்லாந்து யானையை முந்தி, ஆசியாவிலேயே அதிக வயது கொண்ட யானை என்ற சிறப்பைப் பெற்று கின்னஸிலும் தாட்சாயினி இடம்பெற்றது.

Dakshayini3.jpg 

சுமார் 60 ஆண்டுகளாக செங்கல்லூரில் வசித்த நிலையில், வயது முதிர்வு காரணமாக தாட்சாயினி யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  தாட்சாயினிக்கு திருவனந்தபுரம் அருகே உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்குச் சொந்தமான யானை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில்,  தாட்சாயினி நேற்று முன்தினம் மரணமடைந்தது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த  தாட்சாயினியின் இழப்புக்கு ஏராளமானோர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close