காதலை ஏற்க மறுத்த சிறுமிக்கு சரமாரியான அரிவாள் வெட்டு: பின்தொடர்ந்த இளைஞருக்கு கவுன்சலிங் கொடுத்தும் நேர்ந்த கொடூரம்

காதலை ஏற்க மறுத்த சிறுமியை அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளார் அவரின் அண்டைவீட்டைச் சேர்ந்த இளைஞர். சிறுமி தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹைதராபாத்தின் பர்கத்புரா பகுதியில் இன்று காலை 7 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய கச்சிகுடா காவல்துறையினர், ''பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவரின் பக்கத்து வீட்டுக்காரர் பரத் (19) கடந்த சில மாதங்களாக சிறுமியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். அவரைக் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி காதலுக்கு செவி சாய்க்கவில்லை. இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.
பக்கத்து வீடு என்பதால் சிறுமியின் பெற்றோர், இளைஞர் பரத் என்பவரை அருகில் இருந்த பரோசா மையத்துக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். ஆனாலும் பரத் தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று சிறுமியின் அம்மாவை பரத் போனில் மிரட்டியுள்ளார். இதனிடையே இன்று காலை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் சிறுமியின் கழுத்து, கை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கவலைக்கிடமாக உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரத் மீது பிரிவு 307-ன் ( கொலை செய்ய முயற்சித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.