[X] Close

சமூக வலைதளங்களை அலங்கரிக்கும் உத்தரபிரதேச கும்பமேளா படங்கள்


uttar-pradesh-kumbh-mela-pictures

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 10:04 am
  • அ+ அ-

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா களைகட்டி உள்ளது. கும்பமேளா பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களை அலங்கரிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. கடைசியாக கடந்த 2013-ல் நடைபெற்றது. இதுதவிர, 2 மகா கும்பமேளாவுக்கு இடைப்பட்ட காலத்தில் கும்பமேளா நடக்கிறது. அந்த வகையில், பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய கும்பமேளா, வரும் மார்ச் 4-ம் தேதி வரை நடக்கிறது.

கும்பமேளாவின்போது, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 12 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவுக்காக மாநில அரசு ரூ.4,200 கோடி ஒதுக்கி உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 4,200 தற்காலிக கூடாரங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று முன்தினம் மவுனி அமாவாசை நாள் ஆகும்.

இந்த நாளில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. கோலாகலமான இந்த விழா நடைபெறும் பகுதியை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்துள்ளனர். இது தொடர்பான ஏராளமான படங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அலங்கரிக்கின்றன.

மாநில அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் முகநூல் பக்கத்திலும் ஏராளமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. அடுத்த மகா கும்பமேளா வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close