[X] Close

பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடா - எஸ்.எம்.கிருஷ்ணா போட்டி?


bangalore-north-constitution

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 09:42 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடாவும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. புதிய கூட்டணியாக உருவாகியுள்ள காங்கிரஸ் - மஜத இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தனித்துப் போட்டியிடும் பாஜக 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா ஹாசன் தொகுதியில் இருந்து இம்முறை வேறு தொகுதிக்கு மாறுகிறார். ஒக்கலிகர்கள் கணிசமாக வசிக்கும் பெங்களூரு வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த பாஜக, தற்போது அந்தத் தொகுதி எம்.பி.யாக இருக்கும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி தேவகவுடாவுக்கு இணையாக ஒக்கலிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரும் பெங்களூரு வளர்ச்சிக்கு வித்திட்டவருமான முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நிறுத்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, மீண்டும் கட்சிக்கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து சதானந்த கவுடா கூறும்போது, “பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடா போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவரை தோற்கடிப்பது எனக்கு பெருமையே. எனக்கு பதிலாக வேறு ஒருவரை கட்சி மேலிடம் அறிவித்தால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர மக்கள் விரும்புவதால், எங்கள் வேட்பாளரே வெற்றி பெறுவார்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close