[X] Close

கணினிகள் கண்காணிப்பு விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


sc-issues-notice-to-centre-on-plea-challenging-snoop-order

  • போத்திராஜ்
  • Posted: 14 Jan, 2019 14:44 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

நாட்டில் உள்ள எந்த கணினியையும் ஊடுருவிப் பார்க்கவும், கண்காணிக்கவும், தகவல்களைத் திரட்டவும் 10 விசாரணை முகமைகளுக்கு அதிகாரம் அளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம்இன்று உத்தரவிட்டது.

6 வாரங்களுக்குள் மத்தியஅரசு தங்களின் தரப்பு விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

2018-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி நாட்டில் உள்ள அனைத்துக் கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க உத்தரவிட்டது. இதற்காக நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்எல் சர்மா என்பவர் பொதுநலன் மனுவைக் கடந்த மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் உத்தரவு என்பது, சட்டவிரோதமானது, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, தனிநபர் உரிமையைபறிக்கும் முயற்சியாகும், இதை ரத்து செய்ய வேண்டும், விசாரணை அமைப்புகள் ஐடி சட்டத்தின் கீழ் யாரிடமும் கிரிமினல் விசாரணை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார்.

மேலும், அரசியல் உள்நோக்கத்துடன், அரசியல் லாபத்துக்காக யாருடைய செல்போன், கணினிகளையும்ஆய்வு செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close