[X] Close

பாஜக வெற்றி பெறும் என்ற அச்சத்தால் எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி: தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரை


opponents-are-the-opportunist-coalition-due-to-the-fear-that-the-bjp-will-win

பிரதமர் நரேந்திர மோடி : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 09:52 am
  • அ+ அ-

வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சம் காரணமாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் மிகவும் குழப்பமடைந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சில மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்துரையாடினார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நமது நண்பர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். மோடி மோசமானவர் என்றோ, மோடி தலைமையிலான அரசு செயல்படவில்லை என்றோ பாஜகவை மக்கள் வெறுக்கிறார்கள் என்றோ சொல்வதற்கு அவர் களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதனால், பாஜகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக, சமீப காலம் வரை எதிரெதிர் துருவங்களாக இருந்த எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றன. இது சந்தர்ப்பவாத கூட்டணி.

உண்மை என்னவென்றால் ,மத்திய அரசு செயல் படுகிறது என்றுஅவர்களுக்கு தெரியும். மேலும், நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாஜகவுடன் வலிமையான பந்தம் உள்ளது என்றும் தெரியும். எனவே, சுயலாபத்துக்காக எதிர்க்கட்சியினர் குறுகியகால நோக்கத்துக்காக கூட்டணி அமைத்துள்ளனர். ஒரு பக்கம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நாம் முனைகிறோம்.

மற்றொரு பக்கம் சந்தர்ப்பவாத கூட்டணியும் வாரிசு அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. அவர்கள் தங்களுக்கான பேரரசை கட்டமைக்க விரும்புகிறார்கள். ஆனால், நாம் மக்களுக்கு அதிகாரம் வழங்க விரும்புகிறோம். மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் எதிர்ப்பு அரசியல் செய்துவரும் சிலரை நமது தேர்தல் வெற்றி ஆத்திரமடையச் செய்துள்ளது.

ஆனால், அவர்கள் நாட்டு மக்களை குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. மற்ற கட்சிகளைப் போல, நாம் பிரித்தாளும் அரசியலிலும் வாக்கு வங்கி அரசியலிலும் ஈடுபடுவதில்லை. நாட்டு மக்களுக்கு அனைத்து வழிகளிலும் சேவை செய்யவே நாம் இருக்கிறோம். நம்முடைய வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, நம் நாட்டுக்கும் கட்சிக்கும் வரும் மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களை ஈர்க்க நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

 ஏனெனில், அவர்களுக்கு வாரிசு அரசியலில் விருப்பம் இல்லை, வளர்ச்சி அரசியலைத்தான் விரும்புகிறார்கள். வாக்குறுதிகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, செயல்பாட்டை மட்டுமே அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்பதற்காக, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதியும் மாயாவதி தலை மையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close