[X] Close

மாயாவதி - அகிலேஷ் கூட்டணி அறிவிப்பு எதிரொலி: காங்கிரஸ் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை


mayawati-akilesh

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:21 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி முடிவானதால், காங்கிரஸ் தலைவர்கள் இன்று லக்னோவில் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அக்கட்சித் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும் சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றும் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் அறிவித்தனர்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் லக்னோவில் இன்று கூடி அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இந்தக் கூட்டத்தில் உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், மாநில தலைவர் ராஜ் பப்பர் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அஸ்வதி தெரிவித்தார். மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தனியாக கூட்டணி அமைப்பது எதிர்பார்க்கப்பட்டதால், ‘உ.பி.யில் தனித்து போட்டியிடுவோம்’ என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியும் கூறியிருந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாயாவதியும் அகிலேஷும் இணைந்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறும்போது, ‘‘அகிலேஷ் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் சிங்கின் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சிக்கு பாஜக.வினர் பணம் ஒதுக்குகின்றனர். எனவே, அந்தக் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் யாரும் வாக்களிக்க கூடாது’’ என்றார்.

அதற்கு பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி தலைமை செய்தித் தொடர்பாளர் சி.பி.ராய் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:ஷிவ்பால் மீது மாயாவதி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இதற்கு முன்னர் உ.பி.யில் பாஜக ஆதரவில் யார் ஆட்சி அமைத்தது (மாயாவதி) என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த காலங்களில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற பின்னர் பாஜக.வுடன் கைகோர்த்தார். இதை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும்.

உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் இருந்த போது சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கை அவமானப்படுத்தினார். தற்போது சமாஜ்வாதியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி.

இவ்வாறு சி.பி.ராய் கூறினார்.

மம்தா வரவேற்புமேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உ.பி.யில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி வைத்ததை நான் வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close