[X] Close

உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகருக்கு 2-வது இடம்


hambi-city

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:20 am
  • அ+ அ-

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 52 இடங்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் இந்தியாவில் இடம் பிடித்த ஒரே இடம் ஹம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ல் உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 52 முக்கிய இடங்கள் அடங்கியுள்ள இந்த பட்டியலில் கரிபியன் தீவில் உள்ள போர்ட்டோ ரிக்கோ முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த ஹம்பி பெற்றுள்ளது. இந்த இடம் ஏற்கெனவே யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், அதில் கலை நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், அதனைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரை பிரமிக்க வைக்கும். இங்குள்ள ஆயிரக்கணக்கான வரலாற்று சின்னங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தாலும், இன்றும் அதன் அழகு வியப்பை அளிக்கிறது.

இதுகுறித்து ஹம்பி கன்னட பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் சி.எஸ். வாசுதேவன் கூறுகையில், ‘‘ஹம்பி இன்று 4 கிராமங்கள் அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் உலகின் செழிப்பான, அழகான நகரங்களில் ஒன்றாக ஹம்பி திகழ்ந்தது. இங்கு தற்போது காணப்படும் கோயில்களும், சிற்பங்களும், வரலாற்று சின்னங்களும் பல்வேறு படையெடுப்புகளில் இருந்து தப்பியவை.

விஜய நகர பேரரசின் ஆட்சி காலத்தில் சிறப்பாக திட்டமிட்டு, கலை அழகியலோடு நேர்த்தியாக இந்நகரம் உருவாக்கப்பட்டது. தற்போது எஞ்சியுள்ள பல வரலாற்று சின்னங்கள் போதிய முறையில் பராமரிக்கப்படாததால், அவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. ஹம்பியை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்லியல் துறை முறையாக அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டால், இதே போன்ற பல அழகிய சிற்பங்களும், வரலாற்று சின்னங்களும் கிடைக்கக்கூடும்'' என்றார்.

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களின் பட்டியலில் ஹம்பி தொடர்ந்து முதல் 5 இடங்களில் இடம்பிடித்து வருகிறது. இதே போல தெற்காசிய மற்றும் உலக அளவிலும் தொன்மையான இடங்களின் பட்டியலில் ஹம்பி முதல் 5 இடங்களில் தொடர்ந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஹம்பி முதல் இடத்தை பிடித்தது.

கடந்த 2016 - 17 காலக்கட்டத்தில் ஹம்பியை 5.35 லட்சம் சுற்றுலாப்பயணிகள் கண்டு களித்து உள்ளனர். இதில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர் என சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக இங்கு வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஹம்பி நகரின் கட்டமைப்பையும், பிரம்மாண்ட வடிவத்தையும் பார்த்துவிட்டு, ‘‘இது தான் உண்மையான பாகுபலி தேசம்'' என சிலிர்க்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் ‘ஹம்பி விழா' நடத்தப்படுகிறது. அப்போது மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதர நாட்களில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகளும், தங்கும் வசதிகளும் போதிய அளவில் செய்யப்படுவதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் ஹம்பிக்கு புதுப்பொலிவு அளித்து, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close