[X] Close

உருவானது சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி: அகிலேஷ், மாயாவதி கூட்டாக அறிவிப்பு


bsp-chief-mayawati-and-samajwadi-party-chief-akhilesh-yadav-address-a-joint-press-briefing-in-lucknow

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jan, 2019 12:26 pm
  • அ+ அ-

வரும் 2019 மக்களவை தேர்தலை சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல் கூட்டணி தொடர்பாக மாயாவதியும் அகிலேஷும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மாயாவதி, "மக்களவை தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் சேர்ந்து எதிர்கொள்ளும். இது அரசியலில் ஒரு புரட்சி செய்யும். இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்பியதே மக்கள்தான்.

பாஜகவாக இருக்கட்டும், காங்கிரஸாக இருக்கட்டும். ஆட்சியில் இருப்பவர்கள் கொள்கைகள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. இரண்டு கட்சிகளுமே ராணுவ ஒப்பந்தங்களில் ஊழலில் ஈடுபட்டிருப்பது ஓர் உதாரணம். காங்கிரஸ் அறிவித்துவிட்டு நெருக்கடியை அமல்படுத்தினர். ஆனால் பாஜக அறிவிக்காமல் நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருக்கிறது.

வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் சமாஜ்வாதி 38 இடங்களிலும் போட்டியிடும். இரண்டு தொகுதிகள் மற்ற கட்சிகளுக்காக விட்டுவைத்துள்ளோம். ரேபரேலி, அமேதியை காங்கிரஸுக்காக விட்டுவிட்டோம்.

காங்கிரஸை எங்கள் கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. இதை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் முன்னரே அனுபவித்து உணர்ந்திருக்கிறது"என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு இணைந்திருக்கின்றன.  சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close