[X] Close

சபரிமலையில் மேலும் ஒரு பெண் தரிசனம்?- வயதானவர் போல் வேடமணிந்து சென்றதாக தகவல்


36-year-old-dyes-her-hair-grey-claims-to-have-entered-sabarimala-temple

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 09:57 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பனை வயதான பெண் போல் வேடமணிந்து தரிசித்ததாக மஞ்சு என்ற பெண் ஒருவர் கூறியிருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வயதான பெண்மணி போல் வேடமணிந்து சபரிமலைக்கு சென்று வந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து மஞ்சு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் கடந்த 8-ம் தேதி சபரிமலைக்குச் சென்றேன். திரிசூரில் இருந்து பேருந்தில் சென்றேன். சிக்கல் வரக்கூடாது என்பதற்காக தலையை நரைத்திருப்பதுபோல் வர்ணம் பூசிக் கொண்டேன். 18 படிகள் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசித்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சபரிமலையில் எடுத்த புகைப்படத்தையும் மஞ்சு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதுவரை எத்தனை பேர்?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐயப்பனைத் தரிசிக்க வந்த ஏராளமான பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு தரிசிக்காமல் திரும்பினர். திருநங்கைகள் 4 பேர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். 

கடந்த 30-ம் தேதி மாலை, 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே  திறக்கப்பட்டது.

இந்த சூழலில் அன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதன் பின்னர் இலங்கையைச் சேர்ந்த பெண் சசிகலா சபரிமலைக்கு சென்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதை அரசு தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், மஞ்சு என்ற 36 வயது பெண் வயதானவர் போல் வேடமிட்டுச் சென்றுவந்ததாகக் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close