[X] Close

மக்களவை தேர்தலுக்காக ‘மெகா’ கூட்டணி உருவாகுமா?- மாநில கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயாராகும் எதிர்க்கட்சிகள்; உன்னிப்பாக கவனித்து வருகிறது பாஜக


lok-sabha-election

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 09:51 am
  • அ+ அ-

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவுக்குஎதிராக ‘மெகா’ கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மக்களவை தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ‘மெகா’ கூட்டணி அமைக்க வேண்டும் என்று தலைவர்கள் பலர் விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பதில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் உள்ளன. ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். அப்போதே மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த வாரம் மதிய விருந்தளித்தார். இந்த விருந்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் நல்லிணக்கத்தை காட்டுவதாகவே இருந்தது.

இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், சமாஜ்வாதியின் ராம் கோபால் வர்மா, பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் மிஸ்ரா,திரிணமூல் காங்கிரஸின் டெரக் ஓ பிரைன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மிசா பாரதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பு, மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு வழி ஏற்படுத்துமா என்பதுதான் வந்திருந்தவர்களிடம் கேட்கப்படாத கேள்வியாக இருந்தது.

மெகா கூட்டணி என்றால் இயல்பாகவே காங்கிரஸ் கட்சி தலைமையேற்க வேண்டி வரும். ராகுல் காந்தியைதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். ஆனால், அவரை ஏற்க மு.க.ஸ்டாலினை தவிர மற்ற தலைவர்கள் விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு வெற்றியின் அடிப்படையில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தாக உள்ளது. இந்தச் சிக்கலால் தேர்தலுக்கு முந்தைய மெகா கூட்டணியை உருவாக்குவதில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, மாநில கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸைப் பொறுத்த வரை ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில்கிடைத்த வெற்றியால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதனால், வடமாநிலங்களில் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது. ஆனால், எந்தெந்த மாநிலங்களில் பலம் குறைவாக உள்ளதோ அந்த மாநிலங்களில் பலமுள்ள பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக.வை எதிர்க்கலாம் என்று ராகுல்காந்தியிடம் கூறியுள்ளனர்.

அதற்கேற் பதமிழகத்தில் திமுக, பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், அதிக மக்களவை தொகுதிகள் உள்ள உ.பி. (80), மேற்குவங்கம் (42) ஆகிய 2 மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் திணறி வருகிறது. ஏனெனில், உ.பி.யில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியும் தேர்தல் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர்.

மேலும், காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் மட்டுமே (சோனியாவின் ரேபரேலி, ராகுல் காந்தியின் அமேதி) ஒதுக்குவோம் என்று அந்தக் கட்சிகள் கூறிவிட்டன. மேலும், உ.பி. தவிர வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. அதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, உ.பி.யில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கூறுகின்றனர்.

எனினும், தேர்தல் நெருங்க நெருங்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் முடிவில் மாற்றங்கள் ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் மேற்குவங்கத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதில் காங்கிரஸ் குழப்பத்தில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இடதுசாரி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. மேலும், முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம்’’ என்று தெரிவித்தார். இதனால் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடலாம் என்று மாநில கட்சித் தலைவர் சோமேந்திர நாத் மிஸ்ரா வலியுறுத்தி வருகிறார்.

அவர் கூறும்போது, ‘‘எந்தக் காரணத்துக்காகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க கூடாது. அப்படி வைத்தால் காங்கிரஸ் கட்சியை மம்தா தன் பக்கம் இழுத்துக் கொள்வார். வரும் 19-ம் தேதி மம்தா பானர்ஜி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கூட்டத்திலும் காங்கிரஸ் பங்கேற்க கூடாது என்று சோமேந்திர நாத் மிஸ்ராவும், கட்சி தொண்டர்களும் கூறியுள்ளனர். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் பலத்தையும் காட்டவே மம்தா பானர்ஜி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்க முடியாது என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு அசைவையும் பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸை பலமிழக்க செய்வது அல்லது தனித்துஒதுக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும், மாநில கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணி வைப்பது பற்றியும் பாஜக கவலைப்படவில்லை.

ஏனெனில், இடதுசாரி கட்சிகள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தவிர திமுக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணமூல், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே பாஜக.வுடன் கூட்டணி வைத்த கட்சிகள்தான். எனவே, தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பிறகோ நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று பாஜக அமைச்சர் ஒருவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close