[X] Close

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை எதிர்த்து அரசு ஊழியர், தொழிற்சங்கத்தினரின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது: மேற்கு வங்கம், கேரளா, பிஹாரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


2-day-strike-by-the-state-employees-and-the-trade-union-workers

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று 2 நாள் வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 11:06 am
  • அ+ அ-

நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தின்போது மேற்கு வங்கம், கேரளா, பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பாதிப்பு இருந்தது. அங்கு கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து அடியோடி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பிஹார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. பெங்களூரு, டெல்லி, மும்பை நகரங்களில் குறைந்த அளவே வாகனங்கள் இயங்கின. பெங்களூரு நகரில் அரசு அலுவலகங்கள் இயங்கின. ஆனாலும் குறைந்த அளவே ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் கர்நாடகாவில் வேலை நிறுத்தப் போராட்டம் பகுதியளவே வெற்றி பெற்றது.

இதேபோல ஒடிசாவிலும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. அங்கு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

பிஹாரின் மால்டா, கேரளாவின் திருவனந்தபுரம், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்களில் ரயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் கேரளாவில் கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தன. அந்த மாநிலத்தில் வாகனங்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close