[X] Close

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு; அதிமுக எதிர்ப்பு: இரட்டை இலை சின்னத்தையா கேட்டோம்?- உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு கேள்வி


the-case-related-to-the-cooker-logo

டிடிவி, எடப்பாடி- கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 18:06 pm
  • அ+ அ-

குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு வழங்கக் கோரி டிடிவி தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அதிமுக, டிடிவி தரப்பில் விவாதம் கடுமையாக நடந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு வழங்கக் கோரி டிடிவி தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிடிவி அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தல் ஆணையம் தங்களுக்கு குக்கர் சின்னம் வழங்குவதால் ஈபிஎஸ் தரப்புக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பினார்.  

நாங்கள் அவர்களது  சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒன்றும் கேட்கவில்லை. மேலும் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தை நாங்கள் கேட்டால்,  ஏன் எதிர்க்கின்றார்கள். இந்த விவகாரத்தில் இவர்கள் எதிர்க்க எந்த முகாந்திரமும் இல்லை என வாதிட்டார்.

அதேபோல தேர்தல் நடந்தால் அச்சமயத்தில் சின்னம் குறித்து நீதிமன்றம் அணுகலாம் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் நீதிமன்றம் வந்துள்ளோம் எனவும் கூறினார்.

அப்போது எடப்பாடி தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் முகுல் ரோத்தகி, ''இரட்டை இலை சின்ன மேல்முறையீடு வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும், வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் தற்போது சின்னத்தை ஒதுக்கக் கூடாது'' எனத் தெரிவித்தனர்.

அதேபோல தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல வேறு எந்தத் தேர்தலும் இல்லை. எனவே வழக்கை விசாரிக்க அவசரம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர், 19 தொகுதி இடைத்தேர்தல் எந்நேரமும் அறிவிக்க வாய்ப்புள்ளது. எனவே தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close