[X] Close

'கவுரவர்கள் 100 பேரும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள்; இலங்கையில் ராவணன் உருவாக்கிய ஏர்போர்ட்'- ஆந்திர பல்கலை. துணை வேந்தர் சர்ச்சை பேச்சு


andhra-univ-vice-chancellor

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 13:01 pm
  • அ+ அ-

கவுரவர்கள் 100 பேரும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் என்று ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜலந்தரில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் வெள்ளிக்கிழமை அன்று கலந்துகொண்டு பேசிய ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.நாகேஸ்வர் ராவ், ''ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் ட்யூப் தொழில்நுட்பத்தில் பிறந்தவர்கள் கவுரவர்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியா ஏவுகணை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தது.

சார்லஸ் டார்வின் நிறுவிய  பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை, மகா விஷ்ணுவின் தசாவதாரங்கள் முன்னதாகவே நிரூபித்துவிட்டன. விஷ்ணு பயன்படுத்திய சுதர்சன சக்கரம், இலக்கைத் துரத்தி அழித்துவிட்டு மீண்டும் அவரிடமே வந்து சேரும். இது நம்முடைய ஏவுகணைகள் நிலைநிறுத்தத்துக்கு முன்னோடி. இது இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பம் அல்ல, 1000 ஆண்டுகளுக்கு முந்தையது.

ராவணனிடம் ஒரேயொரு புஷ்பக விமானம் மட்டும் இருக்கவில்லை. வெவ்வேறு அளவு மற்றும் திறன் கொண்ட 24 வகையான விமானங்கள் ராவணன் வசம் இருந்தன. அவற்றை இயக்குவதற்காக இலங்கையில் ஏராளமான விமான நிலையங்கள் இருந்தன.

கவுரவர்களின் தாயான காந்தாரி, எப்படி 100 குழந்தைகளைப் பெற்றிருக்க முடியும்? எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். யாரும் நம்புவதுமில்லை. மனிதனால் இது சாத்தியமா?

இப்போது இது சாத்தியம் என்று டெஸ்ட் ட்யூப் தொழில்நுட்பம் நிரூபித்திருக்கிறது. மகாபாரதத்தில் கருவுற்ற 100 முட்டைகள், 100 மண் பாண்டங்களில் போடப்படும். அவை டெஸ்ட் ட்யூப் குழந்தைகள் அல்லாமல் வேறு என்ன?

ஸ்டெம்செல் ஆராய்ச்சி, 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இன்று நாம் ஸ்டெம்செல் ஆய்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் ட்யூப் தொழில்நுட்பத்தில் பிறந்தவர்கள் கவுரவர்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார் நாகேஸ்வர் ராவ்.

இவரின் பேச்சு தற்போது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close