[X] Close

இருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தது கோழைத்தனம்!- இஸ்ரோ முன்னாள் தலைவர்


temple-entry-under-cover-of-darkness-an-act-of-cowardice-ex-isro-chief

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jan, 2019 11:37 am
  • அ+ அ-

இருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது கோழைத்தனமான செயல் எனக் கூறியிருக்கிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்.

இவர் அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவர் நுழைந்து தரிசனம் மேர்கொண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் நுழைந்து தரிசனம் செய்தது மாநில அரசின் உதவியுடன் நடந்திருக்கிறது.

இரவு வேளையில் இதை நடத்தியிருக்கின்றனர். இது கோழைத்தனமானது. கேரள மாநிலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நிறைய பாக்கியிருக்கின்றன. அரசாங்கம் அதில் அல்லவா கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அரசாங்கமோ இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இரவு வேளையில் இப்படி ஒரு செய்கையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் கூட அமைதியாகவே இருந்த மாநிலத்தை அரசாங்கம் இந்த செய்கையின் மூலம் சீர்குலைத்திருக்கிறது.
சபரிமலையில் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழையக்கூடாது என்பது பழக்கம், பாரம்பரியம், பக்தர்களின் நம்பிக்கை இதில் அரசியல் சாசனத்தை நுழைக்கத் தேவையில்லை.

சீக்கியர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்கள் மதத்துக்கென சில பிரத்யேக பழக்கவழக்கங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் ஏன் நீதிமன்றம் தலையிடவில்லை. இந்து மதம் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது. இதில் அரசியல் இருக்கிறது. கட்சியில் நான் தீவிரமாக செயல்படவில்லை ஆனால், அறிவுசார் ஆலோசனைகளை வழங்குவேன். கேரளாவுக்கான வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறேன்" என்றார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது. 

இத்தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித்தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, மலப்புரம் பகுதியை சேர்ந்த கனக துர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகியோர் புதன் கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close