[X] Close

காங்.ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விவகாரத்தில் கிரிமினல் விசாரணை: ராகுல் காந்தி உறுதி


criminal-investigation-will-be-launched-in-rafale-scam-if-cong-comes-to-power-in-2019-rahul-gandhi

  • போத்திராஜ்
  • Posted: 04 Jan, 2019 15:05 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி, பிடிஐ

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால், ரஃபேல் போர் ஒப்பந்த விவகாரத்தில் கிரிமினல் விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக மக்களவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அறையில் இருக்கிறார் என்று கடுமையாகச் சாடினார். ட்விட்டர் மூலம் ரஃபேல் விவகாரத்தில் கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ரஃபேல் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதிலில், “ ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில், நடந்துள்ள முறைகேடுகள் குறித்து நாங்கள் பல்வேறு கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு எழுப்பி இருக்கிறோம். அந்தக் கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்துப் போட்டது தொடர்பாக புதன்கிழமை அவையில் விவாதம் நடந்தது.

நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குப் பிரதமர் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று நாங்களும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் கேட்கிறோம்.

அடிப்படையான கேள்விகளுக்குக்கூட அரசு பதில் அளிக்க மறுத்துவருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அருண் ஜேட்லி அடிப்படையான கேள்விகளுக்குக் கூட பதில் அளிக்க மறுக்கிறார். இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதமர், அவையில் பேசாமல் அறையில் இருக்கிறார், மக்களவைக்குள் வர மறுக்கிறார்.

ஆதலால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களைக் கிண்டல் செய்து, துன்புறத்துவதற்குப் பதிலாக ஜேட்லி பதில் அளிக்க வேண்டும்.

எங்களின் அடிப்படைக் கேள்வி என்பது, நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ரஃபேல் விவகாரம் தங்களின் விசாரணைக்கு உட்படாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாங்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக கிரிமினல் விசாரணை நடத்துவோம்.

பிரமதருக்கு இந்த நாட்டின் இளைஞர்கள் பல கேள்விகளை முன் வைக்கிறார்கள். ரஃபேல் விமானத்தின் விலையை ரூ.526 கோடியில் இருந்து ரூ.1600 கோடியாக யார் நிர்ணயித்தது?, யாருடைய முடிவு?, இந்த முடிவை விமானப்படை அதிகாரிகள் எடுத்தார்களா, பாதுகாப்பு துறைஅமைச்சகம் எடுத்ததா, அல்லது பிரதமர் மோடி எடுத்தாரா?. எங்களுக்குத் தெளிவான பதில் தேவை.

எங்களின் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதியையாவது பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்து இருக்கிறதா? அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா. அவ்வாறு பாதுகாப்பு துறை அமைச்சகம் ஏதேனும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், அதை எந்த அடிப்படையில் நிராகரித்து பிரதமர் மோடி செயல்பட்டார். இந்தக் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன். ஆனால் எனக்கிருக்கும் சந்தேகத்தில் அவர் பதில் அளிக்கமாட்டார்.

ரஃபேல் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கத் தனியார் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான ஏரோநாட்டிகல் நிறுவனத்தை ஒதுக்கிவைக்க யார் முடிவெடுத்தது. இது நரேந்திர மோடியின் பணம் அல்ல. இது உங்களின் பணம்.

இவ்வாறு ராகுல் காந்த தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close