[X] Close

இந்தியா பாதுகாப்பானதாக இல்லை என்று சொல்பவர் மீது வெடிகுண்டு வீச வேண்டும்!- பாஜக எம்.எல்.ஏ பகீர் கருத்து


those-who-say-india-is-not-safe-should-be-bombed-bjp-mla

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 12:11 pm
  • அ+ அ-

ஏஎன்ஐ

இந்தியா பாதுகாப்பான தேசமில்லை என்று சொல்பவர் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று அதிர்ச்சிக் கருத்தை முன்வைத்திருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த எம்.எல்.ஏ., விக்ரம் சானி. இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியாவை பாதுகாப்பான தேசமாக உணர முடியவில்லை எனக் கூறுபவர்கள் துரோகிகள். இந்தத் துரோகிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தியாவில் பாதுகாப்பாக உணரவில்லை; இங்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறுபவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும்.

இவர்களுக்கு நமது தேசத்தின் நன்மதிப்பீடுகளை மதிக்கத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேற வரவேற்கப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட துரோகிகளைக் கையாள எனக்கு அரசாங்கம் மினிஸ்ட்ரி ஆஃப் பாம்ப் அதாவது வெடிகுண்டு இலாகா ஒதுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

அவரது இந்தப் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்ச்சைகளுக்கு புதியவரல்ல..

விக்ரம் சைனி சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பேசிய போது, "இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில், மக்கள் தொகை தொடர்பாக சட்டம் இயற்றப்படும்வரை இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்" எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

நசிருதீன் ஷா சொன்னதற்கு பதிலா?

அண்மையில் பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா, "நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏனெனில், அவர்கள் எந்த மதம் குறித்த கல்வியை பெறுவதில்லை.


நல்லது, கெட்டதும் ஒரு மதத்தினால் கிடைப்பதல்ல என நம்புவதால் அதை அவர்களுக்கு நாம் கற்பிக்க விரும்பியதில்லை. ‘நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத் தருகிறோம். 
நம்பிக்கை என்றால் என்ன என்பதையும் போதிக்கிறோம். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது.

இதுபோன்ற சூழல் மாற்றும் நிகழும் சூழல் தெரியாதது தனக்கு மேலும் கவலை அளிக்கிறது. நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு கோபம் வர வேண்டும். ஆனால், அச்சம் வரக்கூடாது. இந்த நாடு எங்கள் வீடு. இங்கிருந்து யார் எங்களை விரட்ட முடியும்?" எனக் கூறி இருந்தார். இதை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்திருந்தார்.

உ.பி. புலந்த்ஷெஹரில் போலீஸ் அதிகாரி ஒருவர் வன்முறையின்போது கொல்லப்பட்ட சம்பவ பின்னணியில் அவர் இதனைக் கூறியதால் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் நசிருதீனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ., கூறியுள்ள கருத்து நசிருதீன் ஷாவுக்கான பதில் என்று பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close