[X] Close

ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது குறைப்பு: நிதியமைச்சக உயரதிகாரி தகவல்


rbi-scales-down-printing-of-2-000-note-to-minimum-finance-ministry-official

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 10:00 am
  • அ+ அ-

புதிய ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பதாக நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில்,  ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. மிகக் குறைந்தளவிலேயே ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அந்த மூத்த அதிகாரி கூறும்போது, "ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இணைந்தே நாட்டில் உள்ள பணப்புழக்கத்தின் அடிப்படையில் எவ்வளவு நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்படும்போதே காலப்போக்கில் அதனை அச்சிடும் அளவு குறைக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஏனெனில் அதிகமுக மதிப்பீடு கொண்ட 2000 ரூ. நோட்டானது பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை சரிசெய்யவே அச்சிடப்பட்டது. 

எனவே, இது புதிதாக எடுக்கப்பட்ட முடிவு ஒன்றுமில்லை" எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களின்படி, "2017 மார்ச் இறுதியின்படி 3,285 மில்லியன் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஓராண்டுக்குப் பின்னர் அதாவது 2018 மார்ச்சில் இது 3,363 மில்லியன் ரூ.2000 நோட்டுகள் என்றளவில் சொற்ப அளவில் கூடின.

மார்ச் 2018 கணக்கின்படி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பணப்புழக்கம் ரூ.18.037 பில்லியன். இதில் ரூ.2000-ன் பங்களிப்பு 37.3%. மார்ச் 2017-ல் ரூ.2000-ன் பங்களிப்பு 50.2% ஆக இருந்தது. தற்போது ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு குறைக்கப்பட்டதால் இதன் பங்களிப்பும் குறைந்திருக்கிறது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 நவம்பரில் பணம்திப்பு நீக்கத்தின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நாட்டின் ஒட்டுமொத்த பணப்புழக்கத்தில் 86% பங்களிப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close