[X] Close

சபரிமலை சர்ச்சை: கேரளாவில் முழு அடைப்பு; பேருந்துகள் மீது கல்வீச்சு


sabarimala-temple-shrine-shut

  • நெல்லை ஜெனா
  • Posted: 03 Jan, 2019 12:25 pm
  • அ+ அ-

திருவனந்தபுரம்

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை கண்டித்து கேரளாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

 

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான  பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரள அரசைக் கண்டித்தும் நேற்று பல இடங்களில் போராட்டம் நடந்தது.

கேரள அரசைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரத்தில் காலையில் இருந்து சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் வாகனங்களும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கண்ணூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தனியார் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. இதுபோலவே மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.

கேரளா முழுவதும் நேற்று நடந்த போராட்டத்தின்போது மொத்தமாக 80 அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி . மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close