[X] Close

சபரிமலைக்குள் நுழைந்த பெண்கள் இருவரும் நக்ஸல்கள்: பாஜக எம்.பி. ஆவேசம்


women-who-entered-sabarimala-are-maoists-bjp-mp

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 11:49 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்தது பாஜகவையும் பிற வலதுசாரி அமைப்புகளையும் ஆவேசமடையச் செய்துள்ளது.

அந்த வகையில், கேரள பாஜக முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான வி.முரளீதரன் சபரிமலைக்குள் நுழைந்த இரண்டு பெண்களும் நக்ஸல் தீவிரவாதிகள் எனக் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நேற்று இரண்டு பெண்கள் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவரும் பக்தர்கள் அல்ல. அவர்கள் மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள். சிபிஎம், போலீஸார் உதவியுடன் திட்டம் தீட்டி இவர்களை கோயிலுக்குள் அனுப்பியிருக்கின்றனர். இது திட்டமிட்ட சதி. முதல்வர் பினராயி விஜயனும், சிபிஎம் கட்சியும் இந்து கோயில்களுக்கும் இந்து கடவுள் ஐயப்பனுக்கும் எதிராக சதி செய்துள்ளனர். 

இது கேரளாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கே கருப்பு தினம்" என அவர் கூறியிருக்கிறார்.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்ததை கண்டித்து கேரளாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close