[X] Close

வேண்டாம் என்றால் ஆதார் தகவல்களை திரும்பப் பெறலாம்: வருகிறது புதிய சட்டம்


aadhaar-holders-may-get-opportunity-to-opt-out

  • நெல்லை ஜெனா
  • Posted: 06 Dec, 2018 13:32 pm
  • அ+ அ-

புதுடெல்லி

மொபைல் எண் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் இனிமேல் ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தகவல்கள் என்னாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் தரும் வகையில் வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் வகையில் புதிய சட்டம் விரைவில் வருகிறது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது, வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் ‘‘அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது., அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ எனக் கூறி தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஆதார் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. புதிய சட்டத்திருத்ததில் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சட்டத்திருத்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேண்டுமென்றால் ஆதாரை திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்திடம் வழங்கிய ஆதார் எண், தனது ரேகை மற்றும் விழி பதிவுகள் உள்ளிட்டவற்றை விரும்பினால் திரும்பப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதுபோலவே குழந்தைகளின் கைரேகை மற்றும் ஆதார் தகவல்களும் தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அந்த குழந்தை வளர்ந்து 18 வயது ஆன பிறகு தேவையில்லை என்றால் தனது ஆதார் விவரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது நிறைவடைந்த 6 மாதங்களுக்குள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

அதேசமயம் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே அதில் மாற்றம் இல்லை. பான் கார்டு தேவையில்லாதவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை. அவர்கள் யாருக்கும் ஆதார் தகவல்களை தர வேண்டிய அவசியம் இல்லை. கொடுத்து இருந்தாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய சட்டத்தில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் தற்போது இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது. இதன் பிறகு இது, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சரவையின் முடிவைப் பொறுத்து  இது சட்டமாகும். 

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close