பாஜகவின் பொறுப்பில்லாத கொள்கைகளே புலந்த்ஷெஹர் வன்முறைக்குக் காரணம்; உ.பி.யில் காட்டாட்சி நடைபெறுகிறது: மாயாவதி விளாசல்

பாஜகவின் பொறுப்பற்ற கொள்கைகளே புலந்த்ஷெஹர் வன்முறைக்குக் காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
புலந்த்ஷெஹரின் சிங்கராவதி பகுதியில் உள்ள ஒரு வயல் பகுதியில் பசுமாடும், கன்றுக்குட்டியும் கொல்லப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த ஒரு கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க வந்த போலீஸார் மீது அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது,
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து அந்தக் கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது. வன்முறை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அதேசமயம், வன்முறையாளர்கள் கல்வீசி நடத்திய தாக்குதலில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இதுதொடர்பாகப் பேசிய மாயாவதி, ''உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் பொறுப்பற்ற மற்றும் தவறான கொள்கைகளால்தான் புலந்த்ஷெஹரில்வன்முறை ஏற்பட்டுள்ளது. காவலர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாநில அரசின் முறையற்ற கொள்கைகளால் ஏற்பட்ட விளைவு இது. இதனால் இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் அரசு என்ற ஒன்று இருக்கிறது என மக்கள் உணர்வார்கள்.
பாஜக நேர்மையற்ற கூறுகளை ஆதரிப்பதால், உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது. குழு வன்முறைகளைத் தடுக்கும் வகையில், கடுமையான சட்டங்களை பாஜக அமல்படுத்த வேண்டும்'' என்றார் மாயாவதி.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
- அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்!- எச்.ராஜா
- மோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்!- ராகுல் காந்தி தாக்கு
- மக்கள் துயரத்தின் போது எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன: அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு