மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம்: பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்: கோப்புப்படம்
மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம். இதற்காக அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் கருத்துகளும் யோசனைகளும் பெறப்பட்டு அவை தொகுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து 'நவகேரளத்தில் பேரிடர் ஆபத்து குறைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தின.
இதில் கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ''வெள்ளத்தில் ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். புது வீடுகளுக்காக அவர்கள் காத்துக்கொண்டே இருக்க முடியாது. அத்தகைய திட்டங்களில் வழக்கமாக ஏற்படும் தாமதத்தை அரசு தவிர்க்க நினைக்கிறது. புது வீடுகளைக் கட்ட ஏராளமானோரிடம் இருந்து நிறைய கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. 2,000 வீடுகளை மீண்டும் கட்டுவதில் கூட்டுறவுத்துறை பெரும் பங்களிப்பை அளிக்க உள்ளது.
பொதுவாக பெரும் இடர்கள் ஏற்படும் இடத்தில், அரசு இயந்திரமும் தன்னார்வலர்களுமே இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவர். பொதுச்சமூகம் அத்தகைய செயல்களில் அதிகம் ஈடுபடாது. ஆனால் இங்குள்ள நிலை வேறாக இருந்தது. வெள்ளத்துக்குப் பிறகும் நம் மக்களிடையே ஒற்றுமையைக் காண முடிந்தது. வீடுகளைச் சுத்தப்படுத்தி, அவற்றை வாழும் இடமாக மாற்றியது பொது மக்கள்தான். நிவாரணப் பணிகளிலும் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதன்மூலம் கேரளத்தின் மதச்சார்பற்ற மனப்பான்மை பிரதிபலிக்கிறது. மக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம். இதற்காக அனைத்துப் பிரிவினரிடம் இருந்தும் கருத்துகளும் யோசனைகளும் பெறப்பட்டு அவை தொகுக்கப்படும். அவற்றின் மூலம் கேரளத்தை மீட்டெடுப்போம்'' என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- அனைத்து துறைகளிலும் தமிழகம் வீழ்ச்சி அடைந்துள்ளது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
- அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த உறுதியேற்போம்!- எச்.ராஜா
- மோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்!- ராகுல் காந்தி தாக்கு
- மக்கள் துயரத்தின் போது எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன: அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு