[X] Close

எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீது 4 ஆயிரம் கிரிமினல் வழக்குகள்; கேரளா, பிஹாரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு


supreme-court-judgement

  • kamadenu
  • Posted: 04 Dec, 2018 13:46 pm
  • அ+ அ-

நாட்டில் உள்ள முன்னாள், தற்போதைய எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் மீது கடந்த 30 ஆண்டுகளாக, 4 ஆயிரத்து 122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேரளா, பிஹார் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அரசியல்வாதிகள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும், இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், எம்.பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அந்த வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

மேலும், எம்.பி.எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் விவரங்களையும், விசாரணை நடந்து வருவது குறித்தும் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.மேலும், வழக்குக்கு உதவியாக, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில், இந்த வழக்குக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜயன் ஹன்சாரியா,அவரின் உதவியாளர் ஸ்னேகா கலிதா ஆகியோர் எம்பி, எம்எல்ஏக்கள் மீது பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள் குறித்த விரிவான விவரங்களையும், போதுமான அளவுக்குச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் முன்னாள், இந்நாள் எம்.பி, எம்எல்ஏக்கள் மீது கடந்த 30 ஆண்டுகளாக 4 ஆயிரத்து 122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 264 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது, கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிறப்பித்த உத்தரவில்,” பிஹார், கேரள மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதற்கான அறிக்கையை வரும் 14-ம் தேதிக்குள் பாட்னா, திருவனந்தபுரம் உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்

மேலும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருந்தால் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணையை உயர் நீதிமன்றங்கள், அங்கு மாற்ற வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close