[X] Close

சபரிமலையில் அனைத்து விதமான கெடுபிடிகளுக்கும் தடை: போலீஸாரை வெளுத்து வாங்கிய உயர் நீதிமன்றம்


sabarimala-casee

கேரள உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 11:56 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பயன் கோயிலில் பக்தர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்திய போலீஸார் தன்னிச்சையாகப் பிறப்பித்த அனைத்துவிதமான கெடுபிடிகளுக்கும் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சபரிமலையில் எந்தவிதமான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தக் கூடாது. போராட்டம் நடத்தும் இடம் அது கிடையாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டல-மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வந்தனர்.

இரவு நேரத்தில் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கக்கூடாது, சரண கோஷம் எழுப்பக்கூடாது என்று பக்தர்களுக்கு கெடுபிடிகளை போலீஸார் விதித்ததால், பக்தர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 60 பக்தர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனால், சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை திடீரென குறையத் தொடங்கியது.

இந்நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு போலீஸார் தேவையில்லாத கெடுபிடிகளை விதித்துள்ளதற்கு எதிராகவும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர் ராமச்சந்திர மேனன் மற்றும் என். அனில் குமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலைக்கு பக்தர்கள் எளிதாக வந்து சாமிதரிசனம் செய்ய அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அதன்பின் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீஸார் பக்தர்களின் நிலையை உணராமல் தன்னிச்சையாக பிறப்பித்த பல்வேறு கெடுபிடிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம், சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவுக்குத் தடையில்லை.

சபரிமலை சன்னிதானத்தில் எந்தவிதமான போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது. போராட்டம் நடத்தும் இடம் கோயில் அல்ல. மேலும் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பவும் தடையில்லை. குழந்தைகளையும், பெண்களையும், மாற்றுத்திறனாளி பக்தர்களையும் இரவுநேரத்தில் சன்னிதானத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு போலீஸார் அளவுக்கு அதிகமான நெருக்கடிகளைத் தரக்கூடாது, தங்களின் அதிகாரத்தையும் காட்டக்கூடாது. ஒரு சில ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லையை மீறிச் செய்யும் செயல் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது. போலீஸார் மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்கள் தங்களின் நிலையை உணர்ந்து கடமையை சிறப்பாகச் செய்வார்கள் என்று நம்புகிறோம்.

மேலும், மகரவிளக்கு சீசன் முடியும் வரை சபரிமலையில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், சிறீ ஜெகன் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. ஹேமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சபரிமலையில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

அதேபோல நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் வரை அரசு பஸ் இரவு முழுவதும் சென்றுவரலாம். அதற்கு போலீஸார் விதித்திருந்த தடையும் நீக்கப்படுகிறது இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close