[X] Close

'அந்தமான் பூர்வகுடியிடம் இருந்து 200 மீ. தொலைவில் இருந்தோம், அம்புகள் பறந்தன; எந்த நொடியிலும் கொல்லப்பட வாய்ப்பிருந்தது'- திகில் அனுபவம்


another-incident-at-andaman

பட உதவி: இந்தியக் கடலோரக் காவல்படை.

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:43 pm
  • அ+ அ-

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடி மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ், அம்மக்களால் கொல்லப்பட்ட சம்பவம்தான் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சுந்தர் ராஜ்(48), பண்டிட் திவாரி(52) ஆகியோர் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவில் தங்கள் படகை நிறுத்தி சிறிதுநேரம் ஓய்வு எடுத்தனர். அப்போது திடீரென சென்டினல் பழங்குடி மக்கள் அந்த இரு மீனவர்கள் மீதும் கூர்மையான அம்புகளை எய்தித் தாக்குதல் நடத்தியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.

மீனவர்கள் கொல்லப்பட்டதை அறியாத கடற்படை, அவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அந்தமான் கடலோரக் காவல்படைத் தளபதி பிரவீன் கவுரிடம் ஒப்படைத்தது. அப்போது நிகழ்ந்த திகில் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் பிரவீன் கவுர்:

''மீனவர்கள் இருவரையும் தேடி ஹெலிகாப்டரில் தீவுகளுக்கு மேல் பயணித்தோம்.சென்டினல் தீவின் தெற்குப் பகுதி முழுக்கத் தேடிவிட்டு, வடக்கு நோக்கி நகர்ந்தோம். அங்கு தேடியபோது மீனவர்களின் படகு தென்பட்டது. சற்றே தாழ்வாகப் பறந்தவாறு அவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்தேன்.

வடக்கு சென்டினல் மக்களின் இயல்பு குறித்து எங்களுக்குத் தெரிந்தே இருந்தது. இருந்தாலும் ஹெலிகாப்டரைத் தரையிறக்கி, என்னுடைய குழுவினர் உதவியுடன் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க முடிவுசெய்தேன்.

நாங்கள் கீழே செல்லச் செல்ல, சென்டினல் பழங்குடியினர் வில், அம்புகள் மூலம் எங்களைத் தாக்கினர். அவர்கள் ஈட்டிகளையும் வைத்திருந்தனர். அவர்களின் அம்புகள் 100 அடி உயரத்துக்கு எழும்பின. அவர்கள் 50 பேருக்கும் அதிகமாக இருந்தனர். சிவப்பு நிறத்திலான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களில் பெண்கள் யாரும் இல்லை.

அவர்களை வேறோர் இடத்துக்கு திசை மாற்றினால் ஒழிய, மீனவர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று உணர்ந்தேன். மீனவர்களின் படகு இருந்த திசைக்கு எதிர்த்திசையில் சுமார் 1.5 கி.மீ. தூரத்துக்குப் பறந்தோம். அங்கிருந்த பழங்குடி வேட்டைக்காரர்களும் எங்களின் ஹெலிகாப்டரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் ஓரளவு விலகி வந்தபிறகு, மீண்டும் பழைய இடத்துக்கு வேகமாக விரைந்தோம்.

தரையை நெருங்கும் நேரத்தில் படகுக்கு சற்று தூரத்தில் இரண்டு குவியல்கள் கிடந்ததைப் பார்த்தேன். படகின் அருகில் தரை இறங்கினோம். அப்போது மணலில் இரண்டு புதையல்கள் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். எங்கள் குழுவினரில் ஒருவர் அதைத் தோண்டிப் பார்த்தார். அது அம்பெய்தப்பட்டு, கயிற்றால் குரல்வளை நெறிக்கப்பட்டு, இழுத்து வரப்பட்ட ஒரு மீனவரின் மிச்சங்கள்.

அதை எடுத்துக் கொண்டோம். இரண்டு அடி தள்ளி மற்றொரு குவியல் கிடந்தது. அதைச் சோதனை செய்வதற்குள், பழங்குடியினர் திரும்பி வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தோம். எங்களை நோக்கி அம்புகள் பாய்ந்த வண்ணம் இருந்தன. எந்த நொடியிலும் கொல்லப்பட வாய்ப்பிருந்தது

உடனடியாக மீனவரின் உடலை எடுத்துக்கொண்டு போர்ட் பிளேர் திரும்பினோம்.

மற்றோர் உடலையும் கொண்டுவருமாறு ஆணையிடப்பட்டது. நாங்கள் மீண்டும் பழைய இடத்துக்கே சென்றோம். ஆனால் புத்திசாலிகளான பூர்வகுடியினர் இரண்டு பிரிவாகப் பிரிந்திருந்தனர். ஒரு குழு எங்களின் ஹெலிகாப்டரைப் பின்தொடர்ந்தது. மற்றொரு குழு மீனவரின் உடலையும் படகையும் காவல் காத்தது.

இதற்கிடையில் ஹெலிகாப்டரை நோக்கி அம்புகள் பறந்துவந்தன. எந்த வழியும் இல்லாமல், தோல்வியுடன் போர்ட் பிளேர் திரும்பினொம்'' என்றார் பிரவீன் கவுர்.

இதையடுத்து பிரவீன் கவுர் 2006-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மத்திய அரசால் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். மீட்புப் பணிக்காகவும் மோசமான வானிலையில் கடலில் இருந்து இரு மீனவர்களைக் காப்பாற்றியதற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நாகரீகத்தின் தடம் அறியாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேற்று நாகரீக மனிதர்களுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வரும் சென்டினல் பழங்குடியின மக்களால், மீனவர்கள் உதவியுடன் அங்கு சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் ( 27) அம்பெய்திக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close