[X] Close

ஆபத்து மிகுந்த சென்டினல் தீவு: பழங்குடிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர் உடலைக் கண்டுபிடிக்க உதவி கோரும் போலீஸார்


murder-at-andaman

அமெரிக்கர் ஜான் ஆலன்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 12:15 pm
  • அ+ அ-

அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் பாரம்பரிய பழங்குடி மக்களால் அம்பு எய்திக் கொல்லப்பட்ட அமெரிக்கர் உடலை மீட்பதற்கு மானுடவியலாளர்கள், சமூக ஆர்வலர்களின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் இருப்பது நார்த் சென்டினல் தீவு. இந்தத் தீவுக்கு மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூர்விகக் குடிகளான சென்டினல் பழங்குடி மக்கள் வேற்று மனிதர்களை விரும்பவதில்லை என்பதாலும், அவ்வாறு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாலும் இங்கு செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை மீறி கடந்த வாரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) மீனவர்கள் உதவியுடன் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்றார். முதலில் ஜான் ஆலனை ஏதும் செய்யாமல் இருந்த அந்தப் பழங்குடியினர், பின்னர் அம்பு எய்திக் கொலை செய்து, அங்கேயே புதைத்துவிட்டனர் என மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்தத் தீவுக்கு போலீஸார், கடற்படையினர் உள்ளிட்ட ஒருவரும் செல்ல அச்சப்படும் சூழலில் அமெரிக்கர் ஜான் ஆலன் உடலை மீட்பது பெரும் சவாலாக உள்ளது.

இதனால், நார்த் சென்டினல் பழங்குடியினர் குறித்து நன்கு அறிந்த மானுடவியலாளர்கள், மற்ற தீவுகளில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர்.

இதுகுறித்து அந்தமான் நிகோபர் தீவுகளின் போலீஸ் டிஜிபி தீபேந்திர பதக் கூறியதாவது:

''கடந்த 14-ம் தேதி வாடகைக்கு ஒரு படகை எடுத்துக்கொண்டு ஆபத்து மிகுந்த நார்த் சென்டினல் தீவுக்கு அமெரிக்கர் ஜான் ஆலன் சென்றார். குறிப்பிட்ட இடத்துக்கு முன்பே படகை நிறுத்திய மீனவர்கள், அங்கு செல்வது உயிருக்கு ஆபத்து, சென்டினல் பழங்குடியினர் வேற்று மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று எச்சரித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி ஜான் ஆலன், சில பரிசுப்பொருட்கள், கால்பந்து, உணவுப்பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அந்தத் தீவுக்குள் சென்றார்.

பின்னர் 16-ம் தேதி மீண்டும் மீனவர்கள் அந்தத் தீவுக்குச் சென்றபோது, ஜான் ஆலன் உடம்பில் அம்புக் காயம் இருந்துள்ளது. அப்போது மீனவர்களிடம் 13 பக்கக் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் தீவுக்குள் ஜான் ஆலன் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் பார்த்தபோது, ஜான் ஆலன் கழுத்தைக் கயிற்றால் கட்டி கடற்பகுதியில் பழங்குடியினர் இழுத்துச் செல்வதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.

எங்களைப் பொறுத்தவரை மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜான் ஆலன் அம்பு எய்தி தான் கொல்லப்பட்டு இருப்பார். ஆனால், நார் சென்டினல் தீவுக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கு அரசின் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. இதனால், தற்போது அமெரிக்கர் ஜான் ஆலன் உடலை மீட்பதில் சிக்கல் உள்ளது.

மேலும், நார்த் சென்டினல் தீவில் உள்ள பழங்குடிகள் வேற்றுப்பகுதி மக்கள் வந்தால் திடீர் தாக்குதல் நடத்துவார்கள் என்பதால், அங்கு செல்ல அனைவரும் அஞ்சுகின்றனர். ஆதலால், மானுடவியாளர்கள், சென்டினல் பழங்குடிகள் குறித்து நன்கு அறிந்தோர், வனத்துறையினர், கடற்படையினர், அந்தமான் ஆதிம் ஜன்ஜதி சமிதி, சென்டினல் மக்களை ஏற்கெனவே வெற்றிகரமாகச் சந்தித்து வந்தவர்கள் ஆகியோரின் உதவியைக் கோரியுள்ளோம்.

இவர்கள் உதவியுடன்தான் அந்தத் தீவில் புதைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜான் ஆலத்தின் உடலை மீட்கப் போகிறோம். அமெரிக்கர் ஜான் ஆலன் கொலை தொடர்பாக இதுவரை 7 மீனவர்களைக் கைது செய்துள்ளோம்''.

இவ்வாறு டிஜிபி தீபேந்திர பதக் தெரிவித்தார்.

நார்த் சென்டினல் தீவுக்குச் செல்வது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அது பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், பழங்குடியினர் பாதுகாப்புப் பகுதி மற்றும் இந்திய வனத்துறை சட்டத்தின் கீழும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமிக்குப் பின் சென்டினல் தீவில் உள்ள சென்டினல் பழங்குடி மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. உலகின் மற்ற மனிதர்கள் துணையின்றி இன்னும் கற்காலத்திலேயே வாழும் சென்டினல் பழங்குடியினர் மொத்தம் 3 பெண்கள், 12 ஆண்கள் என 15 பேர் வரை மட்டுமே இருக்கலாம் என 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள், அவர்கள் மக்கள் தொகை 400 பேர் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close