[X] Close

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் திடீர் நடவடிக்கை


jammu-kashmir

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் : கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 22 Nov, 2018 10:05 am
  • அ+ அ-

 

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையைக் கலைத்து அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் திடீரென உத்தரவிட்டார்.

காஷ்மீர் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் இருந்த பிடிபி கட்சி, எதிர்க்கட்சிகளாக தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் காங்கிரஸ்  ஆகியவை ஆதரவுடன் ஆட்சி அமைக்க  கோரியது. மற்றொருபக்கம் மக்கள் மாநாட்டுக் கட்சி பாஜக ஆதரவுடன், மற்ற கட்சிகளின் துணையுடனும் ஆட்சி அமைக்க கோரியது. இதனால் குதிரைப் பேரத்துக்கு வழிவக்கும் எனக் கூறி சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டார்.

ஜம்மு காஷ்மீரில், பாஜக, பிடிபி கூட்டணியாக  ஆட்சி செய்தன. ஆனால், கடந்த மாதம் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது. சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கிவைத்து இருந்தார். ஆளுநரின்  6 மாத ஆட்சி காலம் டிசம்பர் 18-ம் தேதியோடு முடிவடைய உள்ளது.

மெகபூபா கடிதம்

இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி மாநில ஆளுநருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் " தனது கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது இது தவிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக்கட்சியும் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மூன்று கட்சிகளுடைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 56 ஆக உள்ளது, ஆனால் ஆட்சி அமைக்க 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் 44 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது . ஆதலால் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் "என்று கடிதத்தில் கோரி இருந்தார்.

சட்டப்பேரவை கலைப்பு

இதனிடையே 2 எம்எல்ஏக்கள் கொண்ட சஜித் லோன் தலைமையிலான மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருப்பதாகவும் அவர்கள் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறி ஆளுநருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி அளித்தார். ஆனால், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் தவிர, மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் யார் என்ற பெயர் விவரங்கள் குறிப்பிடவில்லை.

இரு தரப்பினரும் ஆட்சி அமைக்க ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கோரியதால், யாரை அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அதிரடியாக சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று இரவு உத்தரவிட்டார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதையடுத்து, புதிதாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அனேகமாக மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஆளுநரின் ஆட்சிக் காலம் டிசம்பர் 18-ம் தேதிவரையிலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2020, அக்டோபர் வரையிலும் இருந்தது.

பேக்ஸ் எந்திரம் பிரச்சினை

இதனிடையே முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், “ நாங்கள் ஆட்சி அமைக்கக் கோருகிறோம் என்ற கடிதத்தை பேக்ஸ் மூலம் ஆளுநருக்கு அனுப்ப முயன்றோம். இன்ற நவீன தொழில்நுட்ப உலகில் ஆளுநர் இல்லத்தில் பேக்ஸ் எந்திரம் சரியாக செயல்படாமல் எங்களுடைய கடிதத்தை பெறமுடியவில்லை. தொலைபேசியில் ஆளுநரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் விமர்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது குறித்து பாஜகவுக்கு வருத்தம் ஏதும் இல்லை. ஏனென்றால், ஆட்சி செய்தால், பாஜக ஆள வேண்டும் இல்லாவிட்டால் யாரும்ஆளக்கூடாது என்ற மனநிலையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் விளக்கம்

இதனிடையே சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று நள்ளிரவு விளக்கம் அளித்தது. அதில், சட்டப்பேரவை கலைக்கப்பட 4 முக்கியக் காரணங்களை தெரிவித்திருந்தார். அதில் குதிரை பேரம் மற்றும் அதிகமான பணம் கைமாறுவது தடுக்கப்பட வேண்டும். நிலையான ஆட்சியை எந்த கட்சிகளும் தர இயலாது, எதிரான அரசியல் சிந்தனை உடையவர்கள் சேர்வது ஆகியவற்றை தடுப்பதற்காகவே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close