[X] Close

அமைச்சருடன் பக்குவமாக வாக்குவாதம் செய்த போலீஸ் அதிகாரி!- வைரலாகும் வீடியோ


union-minister-pon-radhakrishnan-gets-into-war-of-words-with-police-over-curbs-on-private-vehicles

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Nov, 2018 16:20 pm
  • அ+ அ-

சபரிமலை சென்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீஸார் தடுத்த நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவருடன் போலீஸ் அதிகாரி ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் தேவசம்போர்டு எதிர்ப்பு காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதனால், ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் பம்பை செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்களுடன் சபரிமலை வந்தார். அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸார், விஐபி என்பதால் அவரது வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படும் என்றும் ஆதரவாளர்கள் அரசு வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினர்.

இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் அதிகாரி யதீஷ் சந்திரா ஐ.பி.எஸ்., அங்கு வந்தார்.

அவரும் பொன்.ராதாகிருஷ்ணனும் பேசிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் உள்ள உரையாடல்:

அமைச்சர்:  நீங்கள் கேரள அரசு போக்குவரத்துக் கழக வாகனங்களை அனுமதிக்கிறீர்கள். அப்படியென்றால் தனியார் வாகனங்களையும் அனுமதிக்கலாமே. தேவையில்லாமல் பக்தர்களை வதைக்கிறீர்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: நான் உங்களுக்கு விளக்குகிறேன் சார். முன்னர் எல்லா வாகனங்களையும் நாங்கள் பம்பைக்கு அனுமதிக்கொண்டிருந்தோம். ஆனால், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கிருந்த பார்க்கிங் ஏரியா அடித்துச் செல்லப்பட்டது.

அமைச்சர்: ஆமாம் எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.

யதீஷ் ஐபிஎஸ்: நீங்கள் தயவுசெய்து நான் சொல்வதை கவனிப்பீர்களா?

அமைச்சர்: ம்ம்.. சொல்லுங்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: இப்போது அங்கு பார்க்கிங் ஏரியாவே இல்லை. மேலும் அங்கு நிலச்சரிவு அபாயமும் இருக்கிறது. வெள்ளத்தால் நிலம் மிகவும் வலுவிழந்து இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டால் பக்தர்களுக்கு ஆபத்து. அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே நாங்கள் வாகனங்களை அனுமதிப்பதில்லை.

அமைச்சர்: ஆனால், அங்கு கே.எஸ்.ஆர்.டி.சி. வாகனம் செல்கிறது அல்லவா?

யதீஷ் ஐபிஎஸ்: ஆமாம் செல்கிறது. ஆனால் அவை அங்கு பார்க் செய்யப்படுவதில்லை. மீண்டும் பக்தர்களுடன் திரும்புகிறதே..

அமைச்சர்: அப்படியென்றால் நீங்கள் தனியார் வாகனங்களும் அங்கு பார்க் செய்யப்படாமல் உறுதி செய்யுங்களேன்.

யதீஷ் ஐபிஎஸ்: சரி நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், ட்ராஃபிக் ஜாம் ஏற்படும்.  நிலக்கல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாரா?

அமைச்சர்: நான் எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பவில்லை.

யதீஷ் ஐபிஎஸ்: ஆம். அதுதான் இங்கு பிரச்சினை. யாருமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.  

அமைச்சரின் சகா: மத்திய அமைச்சரிடம் மரியாதையாக பேசுங்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: நான் சொல்வது என்னவென்றால். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் எல்லா யாத்திரிகளும் சங்கடப்படுவார்கள். அதனாலேயே தடுக்கிறோம். இது குறித்து நான் உயர் அதிகாரிகளிடம் பேசுகிறேன்.

அமைச்சர்: நீங்கள் கே.எஸ்.ஆர்.டி.சி. வாகனங்களை மட்டும் அனுமதிக்கும்போது ஏன் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது.
யதீஷ் ஐபிஎஸ்: சார்.. சார்.. நான் அதைத்தான் சொல்கிறேன். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சார். இதை பின்னர் ஒரு காலத்தில் பரிச்சார்த்த அடிப்படையில் செய்து பார்க்கலாம் சார். 

அமைச்சர்: அப்படியென்றால் உங்களிடம் தேவையான போலீஸ் பலம் இல்லை என்று சொல்லுங்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: பலம் இருக்கிறது சார். ஆனால், சாலை இல்லை சார். அது மலைப்பகுதி சார். சூழலியல் ரீதியாக வலுவற்ற பாதை சார். நிலச்சரிவு ஏற்பட்டால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் சார். அதனால்தான் தடுக்கிறோம். யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. எல்லா பிரச்சினையும் போலீஸ் மீதே வந்து சேரும் சார்.

அமைச்சர்: அப்படியென்றால். நீங்கள் எனது வாகனத்தையும் அனுமதிக்கப்போவதில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
யதீஷ் ஐபிஎஸ்: இல்லை சார். உங்களது வாகனத்தை அனுமதிக்கிறோம் சார். நீங்கள் பதவியில் இருக்கும் மத்திய அமைச்சர். நீங்கள் ஒரு விஐபி சார். விஐபியின் வாகனத்துக்கு அனுமதி இருக்கிறது சார்.

அமைச்சர்: சிரிக்கிறார்

யதீஷ் ஐபிஎஸ்: விஐபி வாகனங்களுக்கு பார்க்கிங் வேறு இடத்தில் இருக்கும். ஆனால், எத்தனை எத்தனை விஐபி வருவார்கள் எனப் பாருங்கள்.

அமைச்சர்: நீங்கள் தேவையில்லாமல் பக்தர்களை சங்கடப்படுத்துகிறீர்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: ஓகே சார். நீங்கள் ஒரு உத்தரவு போடுங்கள் சார். நான் எல்லோரையுமே அனுமதிக்கிறேன் சார்.
அமைச்சர்: உத்தரவு போடும் அதிகாரம் எனக்கில்லை.

யதீஷ் ஐபிஎஸ்: அதனால்தான் சொல்கிறேன்.

அமைச்சர்: நீங்கள் எனது முறையீட்டை மாநில அரசிடம் சொல்லுங்கள்.

யதீஷ் ஐபிஎஸ்: ஓகே சார். நான் எழுத்துபூர்வமாக தெரிவிக்கிறேன் சார். நிலச்சரிவு ஏற்பட்டால் பக்தர்கள் உயிர் பறிபோகும். பிரச்சினையாகிவிடும் சார்.

அமைச்சர்: அது நடக்க வேண்டும் என்றால் அரசு பஸ் செல்லும்போது மட்டும் நடக்காதா என்ன?

யதீஷ் ஐபிஎஸ்: நான் சாலையில் சொல்லவில்லை சார். பார்க்கிங் பகுதியில் சொல்கிறேன் சார்.

அமைச்சர்: நான் பார்க்கிங் பகுதிக்கும் சென்று பார்வையிடுகிறேன்.

யதீஷ் ஐபிஎஸ்: தயவு செய்து செல்லுங்கள் சார். சென்று பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் சார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close