[X] Close

இந்துக் கோவில்கள்தான் ஆனால் கிறிஸ்துவ முறையில் வழிபாடு!- மிசோரம் சுவாரஸ்யம்


temples-inspired-by-churches-in-mizoram

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Nov, 2018 12:39 pm
  • அ+ அ-

- ராகுல் கர்மாகர்

மிசோரம் மாநிலத்தில் இந்துக் கோவில்களில் வழிபாட்டு முறைகள் கிறிஸ்துவ மதத்தினரைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள சில இந்து கோயில்களில் கிறிஸ்துவ வழிபாட்டு முறை பின்பற்றப்படுவது மத நல்லிணக்கத்துக்கு சான்றாக இருக்கிறது.

மத்திய கோர்கா மந்திர் குழுவின் கட்டுப்பாட்டில் மிசோரத்தில் 13 கோயில்கள் உள்ளன. இவற்றில் ஐந்து மாநிலத் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ளன. 

இந்தக் கோயிலில் செய்யப்படும் வழிபாட்டு சடங்குகள் தேவாலயங்களில் செய்யப்படுவதைப் போலவே உள்ளன. இங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் பக்தர்கள் கூட்டம் களை கட்டுகிறது. ஆனால், ஞாயிறு அனைவரும் வர வேண்டும் என்று நிர்பந்தம் ஏதும் இல்லை.

இது குறித்து மத்திய கோர்கா மந்திர் குழுவின் தலைவர் உதய் குமார் கூறும்போது, "மற்ற மார்க்கங்களால் ஈர்க்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. அவற்றில் உள்ள ஒழுங்கையும், நேர்மறை விஷயங்களையும் நாமும் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கும்?

எனது வீட்டின் அருகே ஓம் மந்திர் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் சுழற்சி முறையில் பிரசாதம் கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் ரவா அல்வா, சில நேரங்களில் கீர், பூந்தி எனப் பிரசாதங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு குடும்பத்தினர் பிரசாதம் கொண்டு வருகின்றனர்" என்றார்.

சண்டே ஸ்கூல்:

குழந்தைகளுக்கான சண்டே ஸ்கூலும் நடத்துப்படுகிறது. ஓம் மந்திர் கோயிலில் மட்டும் 40 குழந்தைகள் இந்த வகுப்பில் கலந்து கொள்கிறார்கள். 9 வயது சமைரா ஜோஷி இது பற்றி உற்சாகமாக பேசுகிறார். "ஒவ்வொரு வாரமும் எனது தோழிகள் தங்கள் சண்டே ஸ்கூல் சுவாரஸ்யங்களைச் சொல்வார்கள். இந்த வாரம் பகிர்ந்துகொள்ள எனக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் கதைகள் சொல்லித்தருகிறார்கள்" என அவர் கூறினார்.

அதேபோல், கிறிஸ்துவர்கள் பிரார்த்தனையின்போது பைபிள் வாசகங்கள் அடங்கிய கையடக்கப் புத்தகங்களை வைத்திருப்பார்களே அதே பாணியில் பஜனைகள், ஸ்லோகங்கள் அடங்கிய கையேடு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்லோகங்களை மனப்பாடம் செய்ய முடியாதவர்களுக்காக இந்த கையேடுகள் வழங்கப்படுகின்றன.

இறுதியாக, கிறிஸ்துவ மதத்தில் எப்படி இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து தேவாலயத்தில் பிரார்த்தனை செய்கிறார்களோ அதேபோல் மிசோரம் இந்துகளும் இறந்தவர்களின் சடலத்தை சவப்பெட்டியில் வைத்து சுற்றி நின்று பஜனைபாடி இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close