[X] Close

ஹாட் லீக்ஸ்!:சைவ பவன்


hot-leaks-saiva-bavan

  • kamadenu
  • Posted: 19 Mar, 2018 09:57 am
  • அ+ அ-

அப்பா - பிள்ளை 8 ஜோடி!

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு தமிழகத்திலிருந்து தேர்வான பட்டியலில் 8 ஜோடி அப்பா - பிள்ளைகள்! திருநாவுக்கரசர் - ராமச்சந்திரன், ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணசாமி - விஷ்ணுபிரசாத், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - திருமகன் ஈ.வெ.ரா, ஜே.எம்.ஆரூண் - ஹசன், சுதர்சன நாச்சியப்பன் - மாதவன், நாசே ராமச்சந்திரன் - நாசே ராஜேஷ், கே.ஆர்.ராமசாமி - ராம.கருமாணிக்கம்! “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுறாங்கப்பா’’ என்று கதர் முகாமில் எரிச்சல் குரல்கள் எதிரொலிக்கின்றன.

மகனுக்கு சிதம்பர அறிவுரை!

திகாரிலிருந்து மகன் கார்த்தியை சென்னைக்கு மீட்டுவர கபில் சிபல் உள்பட ஐந்து வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார் ப.சிதம்பரம். மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட ஓரிரண்டு கோரிக்கைகள் போக, மற்றவற்றை மறுத்துவிட்டது  கோர்ட். ’சாப்பாடெல்லாம் எப்படி?” என்று விசாரித்ததில்,  சிறை கேண்டீனில் கேட்டது கிடைக்கும் என்று தெரிந்ததாம். இருந்தாலும், கடுசான சாப்பாட்டை எடுத்துக்காத... முடிஞ்சவரை பழம் -  காய்களா எடுத்துக்க’ என்று கார்த்திக்கு அறிவுரையும் தைரியமும் சொல்லி அனுப்பினாராம் சிதம்பரம்.

பிடிகொடுக்காத ஸ்டாலின்!

மேற்கு வங்க முதல்வரும் தெலங்கானா முதல்வரும் மூன்றாவது அணிக்கு முஸ்தீபு காட்டுகிறார்கள். இதை உடைக்க, ‘வாங்க சாப்பிடலாம்’ என்று எதிர்க்கட்சிகளை அழைத்து விருந்து கொடுத்தார் சோனியா. விருந்தில் கை நனைத்துவிட்டு வெளியில் வந்த காம்ரேட்டுகள், ‘கூட்டணி முடிவெல்லாம் இன்னும் எடுக்கலை. சும்மா சாப்பிட வந்தோம்...’ என சமாளித்திருக்கிறார்கள்.  ‘விருந்துக்கு கனிமொழியை அனுப்பி வைத்த செயல் தலைவர் ஸ்டாலின், தி.மு.க. சார்பில் தானே விருந்து அரசியலில் நேராகத் தலை நுழைத்திருக்கலாமே...  கூட்டணி விஷயத்தில் இவரும் பிடி கொடுக்காமல் காய் நகர்த்துகிறாரா?’ என்பது தமிழ்நாடு காங்கிரஸ்காரர்களின் கேள்வி!

ஜெ சமாதியை மறந்த ஓபிஎஸ்!

கடந்த முறை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பாக அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கிவிட்டு வந்தார் அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார். ஜெயலலிதா சமாதியை தியான மண்டபமாக்கிய ஓபிஎஸ்ஸுக்கு (இப்போதைய துணை முதல்வர் / நிதியமைச்சர்) அம்மா நினைவிடம் ஏனோ ஞாபகத்துக்கு வரவில்லை. சட்டசபைக்கு வரும் வழியில் வண்டியை சமாதியில் நிறுத்தாமல் நேராக கோட்டைக்கே வந்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

வைத்திலிங்கத்துக்கு தடா! 

அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அண்மையில் இரண்டாவது முறை இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். ’இனிமேல் நீங்கள் அதிர்ந்து பேசக்கூடாது. குறிப்பாக கட்சிக் கூட்டங்களில் மைக் பிடித்து ஆவேசமாகப் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் சொல்லி விட்டார்களாம். ‘கட்சி மேடையில் ஏறாமல் அரசியல் எப்படி செய்வது?’ என்று சற்றே யோசனையில் இருக்கிறாராம் வைத்திலிங்கம்.

மகனுக்குத் துண்டு போடும் மந்திரி!

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ரெங்கசாமி, திடீரென தினகரன் பக்கம் தாவிவிட்டார். காலியாக இருக்கும் அந்தப் பதவியைப் பிடிக்க ஆளுங்கட்சிக்குள் அடிதடியே நடக்கிறது. இதற்கு நடுவில், ‘எனக்கு அமைச்சர் பதவி இல்லாட்டியும் பரவாயில்ல... என் மகன் ஐயப்பனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் குடுங்கப்பா...’ என்று மேலிடத்தில் கேட்டு துண்டு போடுகிறாராம் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு.

பெத்தமனம் பித்து.. பிள்ளை மனம் டல்லு..!

வாரிசுப் புள்ளிக்கு அரசியலில் அவ்வளவு நாட்டமில்லையாம். ஆனால், பெற்றமனம் தான்,  ‘அப்பாவுக்குத் துணையா மத்தவங்க நிக்குறதைவிட நீ போறது நல்லதுப்பா’ என்று கட்டி இறக்கி விடுகிறதாம். போதாதுக்கு அப்பாவின் அடிவருடிகள், ‘தம்பிய வெச்சு ஏதாச்சும் நிகழ்ச்சி நடத்துங்க’ என்று மாவட்டங்களுக்கு தொடர் அழுத்தம் தருகிறார்களாம். இதையடுத்து, சில மாவட்டங்களில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை  வாரிசு தலைமையில் நடத்த தயாராகிறார்கள். 

படையப்பருக்கே வேலா?

முருகப் பெருமான் ஆயுதமே கல்வி நிறுவனத்தின் அடையாளமாக வைத்திருக்கும் வள்ளல், படையப்பரை சந்திக்கும் போதெல்லாம்,  ‘உங்களுக்காகத்தான் வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று அவருக்கே வேல் கொடுக்கிறாராம். அவரே பதினெட்டுப் படி மருமகனிடம் போகும்போதெல்லாம், ‘சூப்பருக்கு ஜாதகம் சாதகமா இல்லை... மாமாதான் அடுத்த சி.எம்... எழுதி  வெச்சுக்கோங்க’ என்று கியர் மாற்றுகிறாராம்.

 நொங்கெடுக்கும் ஐ.பி.எஸ்.!

 ‘பாபா’ முகாமில் மன்ற உறுப்பினர் சேர்க்கையை  மூவர் அணிதான் கவனித்துக் கொள்கிறது. இந்த அணியிலிருக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, போலீஸ் விசாரணை கணக்காய் மன்றத்துப் பிள்ளைகளை நோண்டி நொங்கெடுக்கிறாராம். மற்ற இருவருக்கும் இதில் கொஞ்சம் அதிருப்திதான் என்றாலும்  ‘ஒருவேளை தலைவர் சொல்லித்தான் இவரு இப்படி துருவுறாரோ’ என்று அமைதி காக்கிறார்களாம்.

 கட்டுக்கட்டா  ‘கட்டிங்’!

அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளிவந்ததும் தென்சென்னை காங்கிரஸின்  ‘புஷ்டி’ புள்ளி  பவனிலேயே நிருபர்களைக் கூட்டி பஞ்சாயத்து வைத்துவிட்டாராம்.  ‘நடைவண்டி தேடுபவர்கள், உல்லாசப் பேர்வழிகள், எடுபிடிகளுக்கு எல்லாம் பதவிகளை வாரி வழங்கி கட்சியைக் கேவலப் படுத்திட்டாங்க’ என்று அவர் கொந்தளிக்க... ’’சும்மாவா குடுத்துருக்காங்க... அதுக்கும் இளவரசரு கட்டுக் கட்டா ’கட்டிங்’ல வசூலிச்சிருக்காரு’’ என்று அங்கிருந்த சிலர் நிருபர்களின் காதில் ஓதினார்களாம்.

 கட போச்சே...

தகதக கட்சியின் காக்கும் கல்வித் தந்தை ஒருவர்  பிப்ரவரியில் பிரம்மாண்ட நகைக்கடை திறக்க இருந்தார். இதற்காக முப்பது லட்சத்துக்கு விளம்பர காலண்டர்கள் எல்லாம் அச்சடித்து தடபுடலாக ஏற்பாடு நடந்தது. கடைக்கான இன்டீரியர் டெக்கரேஷனே கோடிகளில் செய்தார்களாம். எல்லாம் முடிந்த நிலையில், குஜராத் புள்ளி ஒருவர் புகுந்து  ‘எனக்கு இந்தக் கட்டிடம் வேண்டும்’ என்று கட்டையைக் குடுக்க... அந்த குஜராத்துக்கு ஆதரவாக எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் நெருக்கடிகள் வர... வேறேதும் வில்லங்கம் பண்ணி விடுவார்களோ என்று நகைக்கடை திட்டத்தை ஒத்திப்போட்டு, கட்டடத்தைத் தாரைவார்த்து விட்டாராம் கல்வித் தந்தை.

 ஆடும் வாரிசு.. அலறும் திருச்சி!

ஆளுங்கட்சி திருச்சி அதிகாரப் புள்ளியின் வாரிசு மீது கோபம் மண்டிக் கிடக்கிறார்கள் கட்சிக்காரர்கள். அப்படியொரு ஆட்டமாம்.  அனைத்திலும் மூக்கை நுழைத்து அதகளம் செய்யும் வாரிசு, அண்மையில் நடந்த டாஸ்மாக் பார் ஒதுக்கீடுகளில் பெரும்பகுதியை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கே உறிஞ்சிக்கொண்டு போய்விட்டாராம். ’தாண்டவம் தாங்கலியே... நேரம் பார்த்து கவுத்துட வேண்டியதுதான்’ என்று கருவிக்கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

 சைவபவன்!

பொதுவாக பறப்பன, நடப்பன, ஊர்வன என்று ராஜ்பவனில் விருந்து கமகமக்கும். இப்போதோ, சர்வம் சைவ மயமாய் இருக்கிறதாம். எல்லாம் ஆளுநர் உத்தரவு! வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விருந்தாளிகளாக பவனுக்கு வந்து ஒரு பிடி பிடிப்பவர்கள்கூட... இப்போது சைவத்துக்கு ‘பயந்து’ ஜெர்க் ஆகிறார்களாம். சென்னை வந்தாலும், போனிலேயே ஆளுநருடன் பேசிவிட்டுப் போகிறவர்களும் உண்டாம்.

ஆளுநர் பற்றிய ஆன்மிக செய்தி... செவ்வாய் கிழமைகளில் சென்னையில் இருந்தால் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கட்டாயம் ஆஜராகி விடுகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close