[X] Close

ஹாட் லீக்ஸ்: கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லியோ..!


hot-leaks-political-gossips

  • kamadenu
  • Posted: 12 Mar, 2018 10:05 am
  • அ+ அ-

குக்கரின்விசில்பிளான்

234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தி அநியாயத்துக்கு(!) கஜானாவைக் காலி செய்யவிரும்பவில்லையாம் குக்கர் தளபதி. தேர்ந்தெடுத்த 160 தொகுதிகளில் மட்டும் முழுக் கவனம் செலுத்துவது, மற்ற தொகுதிகளை வந்தால் வரவு... போனால் செலவு கணக்கில் வைப்பது இதுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான குக்கரின் மெகா பிளான் என்கிறார்கள். அதேபோல், ‘ஒரு தொகுதிக்கு 5 கோடி தருவோம்ல..’ என்று சொல்லி, அறிவாலயத்தைச் சுற்றும் உதிரிக் கட்சிகளுக்கும் ‘விசில்’ அடிக்கப் போகிறதாம் குக்கர் படை.

கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லியோ..!

திடீர் திடீரென யாரெல்லாமோ முதல்வர் வேட்பாளராகப் பிரகடனம் செய்துகொள்கிறார்கள். பாவம் அந்த கட்டதுரைக்குத்தான் கட்டம் சரியில்லையாம். வந்த வாய்ப்பெல்லாம் இப்படி வாசலோடு வழுக்கிப் போகிறதே என்று குடும்பத்தின் கேபினட் கூட்டத்தில் பேசியவர்கள், அடுத்த வாரிசுக்காவது முதல்வர் ராசி இருக்குதான்னு இறக்கிப் பார்க்க முடிவெடுத்தார்களாம். வாரிசின் திடீர் அரசியல் ‘உதய’த்துக்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

பாட்ஷாமுகாமில், ஸ்லீப்பர் செல்!

‘பாட்ஷா’ அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது, அவரது குடும்பத்தினருக்குத் தெரியும் முன்பே ‘ஆளவந்த’ ஆண்டனிக்குத் தெரிந்துவிடுகிறது. அவர் கட்சி தொடங்கவிருந்த நேரத்தில், இவர் முந்திக்கொண்டதும், அவர் சிலை திறப்பு விழாவில் பேசப்போகிற அதே நாளில், இவர் முன்கூட்டியே பிரஸ் மீட் வைத்ததும் அப்படித்தான் என்கிறார்கள். ஆனால், ஆண்டனி முகாமில் என்ன நடக்கிறது என்பதில், பாட்ஷா அக்கறையே இல்லாமல் இருக்கிறாராம். அரசியலுக்கு இந்தத் திறமையும் தேவை தலைவா!

சீனா, முகவரி: துபாய் பஸ்டாண்ட், துபாய்!

சிப்பாய்க் கலகம் நடந்த பூமியின் முக்கியப் புள்ளி கடந்த மாதம் இரு வாரப்பயணமாக தூர தேசம் போனார். இது அரசு முறை பயணமல்ல என்பதால், முக்கியத் தலைகள் இருவரிடம் மட்டும், ‘வெளியூர் செல்கிறேன்’ என்று ரகசியமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். திரும்பி வந்தவரிடம், ‘எங்கே பயணம்?’ என்று தலைகள் கேட்டதற்கு, ‘நான் சைனாவுக்குல்ல போனேன்’ என்றாராம். அருகிலிருந்த உதவியாளரோ, ‘அண்ணன் போனது துபாய்க்கு.ஆனா, ஏன் மாத்திச் சொல்றாருன்னு தெரியலியே’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டாராம்.

சூப்பர் படையில் ஐக்கியமாகும் புலிப்படை!

வண்ணக் கனவுகளுடன் பல எண்ணங்கள் சுமந்து அரசியலில் குதித்த புலிப்படை நாயகன், ஆதரவு கொடுத்த கட்சிக்குள் நடக்கும் கூத்துக்களை பார்த்து ஏகத்துக்கும் அப்செட். ‘நம்ம வந்த நேரம் பார்த்தா இப்படியெல்லாம் நடக்கணும்...’ என்று நூடுல்ஸாகிக் கிடக்கும் அவர், சீக்கிரமே சொந்தப் படையைக் கலைத்துவிட்டு சூப்பர் படையில் சேரப் போகிறாராம்! ஏற்கெனவே சென்னையின் ‘முன்னாள் முதல்வனும்’ சூப்பர் படைக்கு வந்துவிட்டதாகத் தகவல்.

நாளிதழுக்குபூஸ்ட்கொடுக்கும்பல்கலைகள்!

புதிதாகத் தொடங்கியிருக்கும் நாளிதழுக்கு மணி அமைச்சர் ஒருவரின் நண்பரே நிதியுதவி செய்திருக்கிறாராம். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால், அரசு சார்ந்த விளம்பரங்களை

அள்ளித் தந்து புதிய நாளிதழுக்கு ‘பூஸ்ட்’ கொடுக்கும் திட்டமும் ரெடி. முதல் கட்டமாகத் தமிழகப் பல்கலை விளம்பரங்கள் புதுப் பத்திரிகையை அலங்கரிக்கும் என்கிறார்கள். வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வெறுமனே முதல்வர், துணை முதல்வர் புகழ் பாடாமல் கொஞ்சம் பொதுச்செய்திகளும் இடம்பெறவிருக்கின்றன.

யுத்தம் முடிஞ்சிருச்சு... சத்தம் ஓயலியே சாமி..!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தால் பதவி பறிபோன அவரது ஆதரவாளர்கள் இப்போது பதவியை மீட்டுவிட்டார்கள். ஆனால், ‘பவர்’ மட்டும் இன்னும் பழைய இடத்தையே சுற்றுகிறது. உதாரணமாக, கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த அருண்குமார் எம்.எல்.ஏ., பன்னீரோடு சென்றதால் பதவியிழந்தார். இவருக்குப் பதிலாக அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ., அந்த இடத்துக்கு வந்தார். அணிகள் இணைப்புக்குப் பிறகு, மீண்டும் அருண்குமார் மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டாலும், அர்ஜூனன் சொன்னால்தான்

காரியம் நடக்கிறது; அவரது அலுவலகத்தில்தான் கட்சிக்காரர்கள் கூட்டம் மொய்க்கிறது. பக்கத்தில் இருக்கிற மாவட்டச் செயலாளர் அலுவலகமோ காற்றாடுகிறது. தமிழகம் நீறு பூத்த நெருப்பாகப் பரவிக்கிடக்கிறது இந்த ‘பவர் பாலிடிக்ஸ்’!

சிஷ்யருக்கு வரன் முடித்த குருநாதர்

டெல்டா மாவட்டங்களிலேயே மிக இளைய சட்டமன்ற உறுப்பினர், ஸ்டாலின் குமார். துறையூர் தொகுதி மக்கள் பிரதிநிதியான இவர், கே.என்.நேருவின் சிஷ்யகோடி. “உங்க செல்லப்பிள்ளைக்கு ஒரு பொண்ணப் பார்த்து கால்கட்டுப் போடக்கூடாதா..?” என்று ஸ்டாலின் குமாரின் பெற்றோர் நேருவிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். அக்கறையோடு பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கிய அவர், திருச்சி மாவட்டக் கழக முன்னோடி ஒருவரின் மகளையே ஸ்டாலின் குமாருக்கு நிச்சயமும் செய்துவிட்டார். இப்போது சிஷ்யரின் திருமணத்தை நடத்த ‘தளபதி’யிடம் தேதி கேட்டுக் காத்திருக்கிறார் குருநாதர்.

ராஜராஜ சோழன் சிலையும் பாஜக திட்டமும்

தஞ்சை பெரியகோயிலில் இருந்த ராஜராஜ சோழன் அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது குறித்து, அரை நூற்றாண்டு கடந்து இப்போதுதான் வழக்குப் பதிந்திருக்கிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ். கோடிகளில் மதிக்கப்படும் அந்த சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள ‘விக்ரம் சாராபாய்’ என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றை மீண்டும் தஞ்சைக்கு மீட்டுவந்து புகழ்தேட மெனக்கெடுகிறது பாஜக.

இதனிடையே, “கருணாநிதிதான் இந்த சிலைகளை குஜராத்துக்குக் கடத்திவிட்டார்” என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வழக்கம்போல் குண்டு போட்டிருக்கிறார்.

இதை ஆட்சேபிக்கும் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், “அந்த சிலைகளை 1940-லேயே விலைக்கு வாங்கிவிட்டது சாராபாய் மியூசியம். அப்போது கருணாநிதிக்கு 16 வயதுதான். பொறுப்பான இடத்திலிருப்பவர் கண்ணை மூடிக்கொண்டு இப்படித் தூற்றலாமா?” என்கிறார்கள். விரைவில் அவர்கள் தஞ்சையில் கூடி கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட இருக்கிறார்களாம்.

ராப்ரியின் கனவை கலைத்த தீர்ப்பு

தனது மனைவி ராப்ரிதேவியை மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பினார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். முன்னாள் முதல்வர் என்பதால் டெல்லியில் வசதியான அரசு குடியிருப்பு ராப்ரிக்குக் கிடைக்கும் என்ற கணக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கணவர் சிறைக்குச் சென்றதால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார் ராப்ரி. கணவர் சிறையில் இருக்கையில் தானும் டெல்லிக்குப் போய்விட்டால், பிஹாரில் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது யார் என்ற கவலையே ராப்ரியின் இந்த முடிவுக்குக் காரணம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close